இறுதிக் கட்டத்தில் வீட்டுக் காவல் மசோதா:மக்களவையில் சைஃபுடின் தகவல்!
- Muthu Kumar
- 26 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 26-
சிறைச்சாலைகளில் நிலவிவரும் நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் கைதிகளை வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பான புதிய மசோதா இறுதிக் கட்டத்தில் உள்ளது என்று உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது. அம்மசோதா தொடர்பான செயலறிக்கைகள் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டு கொள்கையளவிலான ஒப்புதலைப் பெற்றுள்ளன என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் மக்களவையில் குறிப்பிட்டார்.
சட்டத்துறைத் தலைவரின் அலுவலகத்திடம் கலந்தாலோசித்த பின்னர் அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக, கைதிகளுக்குக் கைவிலங்கிடும் அம்சமொன்றை அதில் சேர்க்கப்பட வேண்டியுள்ளது. தற்போதைய வியாக்கியானத்தின்படி, கைவிலங்கு எனப்படுவது. அது கைகளில் பூட்டப்படும் விலங்குகளை மட்டுமே குறிப்பதாக இருக்கிறது.
ஆனால், அது கருவிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனும் ஓர் அம்சம் மசோதாவில் சேர்க்கப்பட வேண்டியுள்ளது என்றார் சைஃபுடின். நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது 83,808 கைதிகள் உள்ளனர். ஆனால், அங்கு 76,311 கைதிகளை அடைத்து வைப்பதற்கு மட்டுமே இடவசதி உள்ளது என்றார் சைஃபுடின்.
அந்த மொத்த கைதிகளில் 65 முதல் 70 விழுக்காட்டினர் விசாரணைக் கைதிகள் அவர்கள் அபாயகரப் போதைப் பொருள் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் ஆவர். மின்னியல் கண்காணிப்பின் மூலம் கைதிகளை வீட்டுக் காவலில் வைக்கும் சாத்தியம் குறித்தும் ஆராயப்படுகிறது.
அதன் மூலம் சிறைக் கைதிகளின் எண்ணிக்கையை 35 விழுக்காடு வரை குறைக்க முடியும் என்றும் சைஃபுடின் நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



