'பாபா நோன்யா' மக்கள் தங்களின் பிறப்புப் பத்திரத்தில் 'திருத்தம் செய்ய அரசு ஏற்பாடு!
- Muthu Kumar
- 12 Oct, 2025
கோலாலம்பூர், அக். 12-
மலாக்காவில் உள்ள 'பாபா நோன்யா' சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இப்போது தங்கள் பிறப்புச் சான்றிதழ்களில் தங்களின் வம்சாவளியைக் குறிப்பிட தங்கள் இனத்தின் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.இந்த விதி, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள சீனர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள 'பாபா நோன்யா' சமூகத்தினருக்கும் விரிவுபடுத்தப்படுவதாக, மலேசிய பாபா மற்றும் நோன்யா சங்கத் தலைவர் ரொனால்ட் கன் தெரிவித்தார்.
இதில் முக்கிய பங்கை ஆற்றியிருக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் செனட்டர் கே. சரஸ்வதிக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இதன் தொடர்பில் அன்வாரிடம் பல ஆண்டுகளுக்கும் மேல் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததாக, ரொனால்ட் கூறியதாக தி ஸ்டார் நேற்று தெரிவித்தது."மலேசியர்கள் எனும் முறையில், அண்மையில் நாங்கள் பெற்ற இந்த செய்தி அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்டுள்ள ஒரு சிறந்த பரிசாகும். இப்போது நாங்கள் 'பாபா நோன்யா' சமூகமாக விளங்குவோம். உள்ளூர் சீன மக்கள் மத்தியில் இது ஒரு துணை இனப் பிரிவாகவும் விளங்கும் என்று ரொனால்ட் கூறினார்.
மலாக்காவாசிகளுக்கான விண்ணப்ப செயல்முறை கடுமையாக இருக்கும் என்றும் விண்ணப்பதாரர்கள் முதலில் சங்கத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் கூறிய அவர், பின்னர் அதை தேசிய பதிவிலாகாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் அவர்களிடம் நேர்காணல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மூல விண்ணப்பதாரர்கள் பாபா நோன்யாவாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவுடன், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தானாகவே அந்த அந்தஸ்துக்குத் தகுதி பெறுவார்கள் என்று ரொனால்ட் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



