பள்ளிகளில் பிரம்படி தண்டனை கொடுப்பதா அரசாங்கம் கவனமாக ஆராயும்-அன்வார்!
- Muthu Kumar
- 24 Oct, 2025
கோலாலம்பூர், அக். 24-
பள்ளிகளில் பிரம்படித் தண்டனையை அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனமாக ஆராயும். ஆனால், பிரம்படித் தண்டனை துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய கடுமையான வழிகாட்டிகளும் கட்டுப்பாடுகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார்.
இது தம்முடைய தனிப்பட்ட கருத்து என்றும் இது அரசாங்க கொள்கையாக இன்னும் மாறவில்லை என்றும் அன்வார் விளக்கினார். கல்வி அமைச்சு மற்றும் மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இது குறித்து விரிவாக கலந்து ஆலோசிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். பிரம்படியின் தேவை பற்றி ஏற்கெனவே என்னுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளேன். அத்தண்டனையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அதே நேரத்தில், கடுமையான நிபந்தனைகளுடன் அதனை நிறைவேற்ற வேண்டும்.
பகிரங்கமான முறையில் பிரம்படி கொடுப்பதை நான் ஏற்க மாட்டேன். கையில் பிரம்படி கொடுக்கலாம். ஆனால், அதனை மூர்க்கத்தனமாக மேற்கொள்ளக்கூடாது என்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அன்வார் கூறினார். மாணவர்களிடம் கட்டொழுங்கை ஏற்படுத்துவதற்காக அவர்களுக்குப் பிரம்படி கொடுக்க ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டும் எனும் ஜெலுத்தோங் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயரின் துணைக் கேள்விக்குப் பதிலளித்தபோது அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாணவர்களுக்குப் பிரம்படி கொடுப்பது
சிறார் துன்புறுத்தலுக்கு ஒப்பானது என்று சில மனித உரிமை அமைப்பகள் குறை கூறுகின்றனர்.ஆனால் அதை பொறுப்பான முறையில் முறையாக கையாள வேண்டும் என்று கல்வியாளர்களும்,பெற்றோர்களும் கூறுகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



