ஆதரவற்ற விலங்குகள் கருத்தடை திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும்-SAFM!
- Muthu Kumar
- 20 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 20 -
வீதிகளில் சுற்றித் திரியும் ஆதரவற்ற விலங்குகளை 'பிடித்து-கருத்தடை செய்து- திரும்பவும் விட்டு விடுதல்' திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என்று, பெர்சத்துவான் ஹைவான் தெர்பியார் மலேசியா (எஸ்ஏஎஃப்எம்) என்ற அரசு சாரா அமைப்பு பரிந்துரைத்திருக்கின்றது.
இதன் வழி, அத்தகைய விலங்குகள் பிரச்சினையைக் கையாள்வதில் மிகவும் மனிதாபிமான முறையிலான அணுகுமுறை பின்பற்றப்படும் என்று அவ்வமைப்பு கூறியுள்ளது.2015ஆம் ஆண்டு விலங்குகள் நலச் சட்டத்தை அரசாங்கம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமரும் பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சில தினங்களுக்கு முன்னர் மக்களவையில் குரல் எழுப்பி இருந்தார்.
அவரின் அத்தகைய கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், வன்முறை பின்பற்றப்படாமல், விலங்குகளில் இனவிருத்தியைக் கட்டுப்படுத்துவதில் இத்தகைய அணுகுமுறை ஆக்ககரமானதாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்தது."ஆதரவற்ற விலங்குகளுக்கு எதிரான குறிப்பாக, விலங்குகளை விருப்பம்போல் சுட்டுக் கொல்லும் போக்கு போன்ற வன்முறைகள் நிகழ்வதை தடுப்பதன் மூலம், அத்தகைய விலங்குகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்படுவதை உறுதிப்படுத்த, விலங்குகள் நலச் சட்டம் மறுஆய்வு செய்யப்படுவதும் திருத்தம் செய்யப்படுவதும் மிக முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்.
"ஆதரவற்று சுற்றித் திரியும் விலங்குகளை நிர்வகிப்பதற்காக, விலங்குகளை சுட்டுக் கொல்வதன் மூலம் பின்பற்றப்படும் வன்முறைச் செயல்களை, பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தம் தடுக்கும் என்றும்நாங்கள் நம்புகிறோம்" என்று அச்சங்கம் கூறியது.வீதிகளில் சுற்றித் திரியும் விலங்குகளை விருப்பம்போல் கொல்லும் ஊராட்சி மன்றங்களை இஸ்மாயில் சப்ரி நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை கண்டித்திருந்தார்.
மக்களவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 2015ஆம் ஆண்டு விலங்குகள் நலச் சட்டத்தைப் பின்பற்றி செயல்படுமாறும் ஊராட்சி மன்றங்களை அவர் வலியுறுத்தினார். ஆதரவற்ற விலங்குகளைக் கொல்லும் நடவடிக்கையை எதிர்க்கும் வகையில், அதன் தொடர்பான ஒரு மகஜரை வழங்குவதற்காக, சுமார் 100 பேர் இம்மாதம் 12ஆம் தேதி நாடாளுமன்ற கட்டடத்திற்கு வந்திருந்தனர்.அவர்கள் வழங்கிய அந்த மகஜரை இஸ்மாயில் சப்ரி மற்றும் சட்டம், கழகச் சீர்திருத்தத்துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் உட்பட மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்வந்து பெற்றுக் கொண்டிருந்தனர்.
கடந்த அக்டோபர் மாதத்தில், திரெங்கானு, சுங்கை பெசுட்டில், பலரிடம் பாசத்துடனும் ஒரு பூனைக் குட்டியுடன் விளையாடிக் கொண்டும் அதனுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டும் வந்த 'கோப்பி' என்ற பெண் நாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அக்குழுக்களினால் இந்த மகஜர் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது.
கோப்பி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பல சமூக வலைத்தளவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு, அக்கொடூரத்தைப் புரிந்த சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தையும் மூவின வலைத்தளவாசிகள் கடுமையாகச் சாடினர்.இது குறித்து கருத்துரைத்த திரெங்கானு கால்நடைச் சேவை இலாகா, விலங்குகள் நலச் சட்டத்தின்படி அச்சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறியிருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *