எப்ஸ்டீன் பாதிக்கப்பட்டவர்களை வன்கொடுமை வலைக்குள் வீழ்த்தியது எப்படி?
- Muthu Kumar
- 09 Feb, 2026
அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள ஒரு கோடைக்கால முகாமின் போது, 14 வயது சிறுமி ஜேனுடன் (அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட கோப்புகளில் அடையாளம் காணப்பட்ட பெயர்) ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே நடந்த ஒரு சிறிய உரையாடல், அவருக்கு பல ஆண்டுகாலத் துன்புறுத்தலாக மாறியது.
பிரிட்டிஷ் சமூகவாதி கிஸ்லேன் மேக்ஸ்வெல் தனது நாயுடன் அந்தப் பக்கம் நடந்து சென்றபோது, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள நின்றார். அவர்கள் பேசத் தொடங்கியதும், பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் (அப்போது வயது 41) அவர்களுடன் இணைந்துகொண்டார்.
மிச்சிகனில் உள்ள 'இன்டர்லோச்சென் சென்டர் ஃபார் தி ஆர்ட்ஸ்' இளைஞர் முகாம் வளாகத்தில் தனது பெயரில் ஒரு தங்கும் விடுதி இருப்பதாகவும், அங்கு கல்வி உதவித்தொகைக்குத் தான் நிதி வழங்குவதாகவும் ஜேனிடம் எப்ஸ்டீன் கூறினார். அந்தப் பாலியல் குற்றவாளி ஜேனின் தாயாரைக் கவர முயற்சித்ததுடன், புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது மாளிகைக்கு தேநீர் அருந்த அவர்கள் இருவரையும் அழைத்ததாக 'தி டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் சிறுமியின் திறமையைப் பாராட்டி அவரைத் தூண்டிலிட்ட எப்ஸ்டீன், சில மாதங்களிலேயே ஜேனைத் தனது துன்புறுத்தல் படிநிலைக்குள் சிக்க வைத்தார். ஜேன் பணத்திற்காக அவருக்கு "மசாஜ்" செய்யத் தொடங்கினார், இது பின்னர் பாலியல் துன்புறுத்தலாக மாறியது. ஜேன் சுமார் மூன்று ஆண்டுகள் இந்த வலையில் சிக்கியிருந்தார்.
ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான 35 லட்சத்திற்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட கோப்புகளை அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்டது. பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலரே தங்களுக்கு நேர்ந்த துயரத்தைப் பகிரங்கமாகக் கூறியுள்ளனர். ஜேனின் இதயத்தை நொறுக்கும் சாட்சியம் ஒரு உதாரணம் மட்டுமே. மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் மற்றும் போலீஸ் அறிக்கைகள் எப்ஸ்டீன் நடத்திய அந்தத் துன்புறுத்தல் திட்டத்தின் அளவை வெளிப்படுத்துகின்றன.
எப்ஸ்டீன் 1,000-க்கும் மேற்பட்ட பெண்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியதாக நீதித்துறை மதிப்பிட்டுள்ளது. இதுவரை, பிரபலங்கள், நிதி நிறுவன அதிபர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களும் முகங்களும் பகிரங்கமாக வெளிவந்துள்ளன. ஆனால், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால் அவை இன்னும் தெரியவில்லை.
இளம் பெண்களையும் சிறுமிகளையும் கண்டறிய எப்ஸ்டீன் பல உத்திகளைப் பயன்படுத்தினார். புளோரிடாவில், ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சிறுமிகளை அவர் குறிவைத்தார். தனது மாளிகையில் தனக்கு "மசாஜ்" செய்ய அவர்களுக்கு அவர் "பணம்" கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
நியூயார்க்கில், கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி ஆர்வமுள்ள பெண்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தைக் காட்டி ஆசைவார்த்தை கூறினார். அவர்களை மன்ஹாட்டன் நகர வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்து அங்கு துன்புறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஐரோப்பாவில், மாடலிங் ஏஜென்சிகளுடனான தனது தொடர்புகளைப் பயன்படுத்தி, தன்னுடன் வந்தால் அவர்களைப் பிரபலமாக்க முடியும் என்று பெண்களை நம்ப வைத்தார். அவர்களை அமெரிக்காவிற்குக் கடத்திச் சென்றதாகவும், பின்னர் அந்தப் பெண்களைத் தனது செல்வாக்குமிக்க நண்பர்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
தன்னால் பாதிக்கப்பட்ட பெண்களையே பயன்படுத்தி, அவர்களின் நண்பர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் இந்த வேலைக்குச் சேர்க்க எப்ஸ்டீன் தூண்டியுள்ளார். அவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டு, நியூயார்க் நகரம், பாம் பீச், நியூ மெக்ஸிகோவில் உள்ள 8,000 ஏக்கர் பண்ணை மற்றும் அமெரிக்க விர்ஜின் தீவுகளில் உள்ள ஒரு தனியார் தீவு ஆகியவற்றில் துன்புறுத்தப்பட்டனர். அந்தத் தீவு "பீடோஃபைல் தீவு" (பாலியல் குற்றவாளிகள் தீவு) என்று அழைக்கப்படுகிறது என 'தி டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



