எதிர்ப்புப் பேரணியை ஆதரிக்கிறோமா?ஹம்சா!
- Muthu Kumar
- 26 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 26-
இன்று நடைபெறவிருக்கும் அன்வார் எதிர்ப்புப் பேரணியைத் தாங்கள் ஆதரிப்பதாகக் கூறப்படுவதை அரசு சார்பற்ற ஆறு இயக்கங்கள் மறுத்துள்ளன. அந்த ஆர்ப்பாட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் அந்த அந்த இயக்கங்களின் பெயர்களை எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் பயன்படுத்தியிருப்பதைத் தொடர்ந்து இந்த மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் நிலையற்றதன்மை மேலும் தொடருமானால் தாங்கள் வலியுறுத்திவரும் துறைசார் சீர்திருத்தங்கள் அஸ்தமனமாகிவிடும் என்று பெர்சே, சி4 செண்டர், ஐடியாஸ், புரோஜெக் சாமா, பூசாட் கோமாஸ் மற்றும் டிரான்பேரன்சி இண்டர்நேஷனல் மலேசியா ஆகிய ஆறு இயக்கங்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் எச்சரித்துள்ளன.
எந்தவொரு கட்சியும் காலம் முழுவதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க முடியாது என்பதால், துறைசார் சீர்திருத்தங்களை மேற்கொள்வது நீண்ட காலத்திற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் நன்மையைக் கொண்டுவரக் கூடியவையாக இருக்கும். ஆகவே, துறை ரீதியிலான சீர்திருத்த முயற்சிகளை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கூட்டறிக்கையொன்றில் அந்த இயக்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
அரசாங்கத்தைப் பாதி தவணைக் காலத்தில் புறவாசல் வழியாக வந்து கவிழ்க்கும் முயற்சியை நாங்கள் நிராகரிக்கிறோம். கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் “ஷெரட்டன் மூவ்" எனப்படும் அரசியல் சதித்திட்டத்தின் மூலம் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதால் நாட்டின் அரசியலில் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்பட்டது என்பது அனைவரும் அறிவோம்.
அரசாங்கத்தை மாற்றினாலும்கூட, அப்புதிய அரசாங்கத்தால் சீர்திருத்தங்களை அமல்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.வரும் பதினாறாவது பொதுத்தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில் துறைசார் சீர்திருத்தங்கள் அமலாக்கம் செய்யப்படுவதைக் காண நாங்கள் விரும்புறோம் என்று அந்த இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
நடப்பு அரசாங்கம் மீதான தங்களின் அதிருப்தியைத் தெரிவிப்பதற்காக அரசு சார்பற்ற பல இயக்கங்களின் தலைவர்கள். தம்மைச் சந்தித்ததாக ஹம்சா நேற்றுதினம் குறிப்பிட்டிருந்தார்.
அவர்கள் அதிருப்தியடைந்துள்ள காரணத்தால் சனிக்கிழமை (இன்று) நடைபெறவிருக்கும் "தூருன் அன்வார் பேரணியில் அவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். அவர்களோடு மேலும் பலரும் அதில் பங்கெடுப்பார்கள். இதற்காக எங்களிடம் கோபம் கொள்ள வேண்டாம். ஏராளமான பிரச்சினைகள் சூழ்ந்து கொண்டிருப்பதால், மக்கள் தங்களிள் ஆட்சேபத்தைத் தெரிவிக்க முனைகின்றனர் என்றார் ஹம்சா.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



