குறைந்த கட்டணமே கேடிஎம்பி லாபக் குறைவுக்குக் காரணம்- லோக்!
- Muthu Kumar
- 16 Jul, 2025
கோம்பாக், ஜூலை 16-
அரசாங்கத்தினால் உதவித்தொகை வழங்கப்பட்டு குறைந்த அளவில் கட்டணம் விதிக்கப்படுவதால்தான், கெரேத்தாப்பி தானா மெலாயு நிறுவனத்தின் (கேடிஎம்பி) பயணிகள் சேவையினால் லாபத்தை அடைய முடியவில்லை என்று. போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.
டிக்கெட் விலையை அதிகரிப்பதன் மூலம் கேடிஎம் பயணிகள் சேவையை லாபம் அடையச் செய்வதில் உதவ முடியும் என்றாலும், சமூக கடப்பாடு கொண்டுள்ள ஓர் அரசு சார்புடைய நிறுவனமாக கேடிஎம் இருப்பதால், தற்போதைக்கு அது ஒரு முதன்மையான திட்டமாக இருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
“இவ்வாறு செய்வதன் மூலம், அதனால் (கேடிஎம்பி) நிதி நிலைத்தன்மையை அடைய
முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எனினும், இப்போதைக்கு அது எங்களின் முக்கிய நோக்கமாக இல்லை.“காலப்போக்கில் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதும் நிதி இடைவெளியைக் குறைப்பதுமே மிக முக்கியமானது" என்று, நேற்று திங்கள்கிழமை பத்துமலையில் உள்ள ரெப்பிட் பஸ் வளாகத்தில் புதிய டீசல் பஸ் சேவையை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது லோக் தெரிவித்தார்.
தற்போதைக்கு கேடிஎம்பியின் சரக்கு சேவையும் மின்சார ரயில் சேவையும் (ஈடிஎஸ்) தொடர்ந்து லாபமடைந்து வருவதாக அவர் கூறினார்.லாபம் அடைந்து வரும் குறிப்பாக கேடிஎம் பயணிகள், ஈடிஎஸ் மற்றும் சரக்கு சேவைகள் மூலம் கேடிஎம்பியின் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதுதான் முக்கியமாகும்" என்று அவர் கூறினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் கேடிஎம் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. இதனிடையே, ஈடிஎஸ் சேவையை கிழக்குக் கரைக்கும் விரிவுபடுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறிய அவர், அங்குள்ள மாநிலங்களில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் என்றார்.
தற்போதைக்கு கிழக்குக் கரை மாநிலங்களான பகாங், திரெங்கானு மற்றும் கிளந்தானுக்கு கேடிஎம்பியின் டீசல் ரயில்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டிருப்பதாகவும் ஆனால், கிழக்குக்கரை இணைப்புத் திட்டம் எதிர்காலத்தில் அம்மாநிலங்களில் விஸ்தரிப்பு செய்யப்படும் என்றும் லோக் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



