ஜூன் மாதத்தில் இளையோர் நாடாளுமன்றம்
- Tamil Malar (Reporter)
- 19 Jan, 2026
கோலாலம்பூர், ஜன.19-
இளைஞர்களின் குரலை நாடாளுமன்ற மட்டத்தில் கொண்டு வரும் நோக்கில் அமைக்கப்படும் இளையோர் நாடாளுமன்றம் (Parlimen Belia) இந்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளையோர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் மே மாத தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதல் அமர்வு ஜூன் மாதத்திலேயே நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை சபாநாயகர் தான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கூறுகையில், இளையோர் நாடாளுமன்றத்தை செயல்படுத்துவதற்கான பெரும்பாலான தயாரிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். அதில், அமர்வு நடத்தும் முறை, விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன என்றார்.
தற்போது பல்கலைக்கழக அளவில் அரசியல் கட்சிகளை அமைப்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதுவே தற்போது முக்கிய கவனமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், இளைஞர் நாடாளுமன்றத்தின் செயல்பாடு, தொழில்நுட்ப அமைப்புகளின் சீரான செயல்பாடு, இறுதித் தயாரிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கு உட்பட்டதாக இருக்கும் என அவர் விளக்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



