மத வெறுப்பு மற்றும் வன்முறைக்கு இடமில்லை – அமைச்சர் ஆரோன் ஆகோ டாகாங்
- Surendran Sumdraraj
- 10 Mar, 2026
புத்ராஜெயா, மார்ச் 10-
மலேசியா போன்ற பல இனங்களும் பல மதங்களும் இணைந்து வாழும் நாட்டில் மத வெறுப்பு, தூண்டுதல், வெறுப்புணர்வு அல்லது சமூக மற்றும் மத உணர்வுகளை காயப்படுத்தும் எந்தவொரு வன்முறைச் செயல்களும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், சமீபத்தில் நிகழ்ந்த மூன்று சம்பவங்களை தேசிய ஒற்றுமை அமைச்சு மிகவும் கவலைக்கிடமாகக் கவனித்துள்ளதாகக் கூறினார். இந்த சம்பவங்கள் நாட்டின் சமூக ஒற்றுமையையும் அமைதியையும் பாதிக்கக்கூடியவை என்றும் அவர் எச்சரித்தார்.
“நாட்டின் அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் தீவிரவாத மனப்பான்மையுடையவர்களுக்கு எதிராக எந்தவித சமரசமும் இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அனைவரையும் அடையாளம் காண போலீஸ் முழுமையான விசாரணை நடத்தி, தற்போதுள்ள சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் போலீஸ் துறையிடம் கேட்டுக்கொண்டார்.
சமீபத்தில் சமூக ஆர்வலராக அறியப்படும் “செகு சந்திரா” என்பவரின் வாகனம் சில பொறுப்பற்ற நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. இதற்கிடையில், சமூக வலைதளங்களில் பரவிய காணொளியில் ஒருவர் இந்து மதத்தின் புனிதச் சின்னமான “திரிசூலம்” மீது காலால் மிதித்து சேதப்படுத்தும் காட்சி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் இந்து மதத்தைச் சார்ந்தவர்களிடையே பெரும் கவலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மேலும், மலேசியாவில் மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



