சையட் சாதிக் வழக்கு: மேல் முறையீடு தொடரும்
- Tamil Malar (Reporter)
- 17 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 17-
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையட் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான், அர்மாடா நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான இறுதி முறையீட்டை தொடருமாறு அரசு வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு வழக்கறிஞர் தான் ஸ்ரீ முகமட் துசுகி மொக்தார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) துணை பொது வழக்குரைஞர் டத்தோ வான் ஷாருடின் வான் லாடின் தலைமையிலான குழுவினரின் கருத்துக்குப்பிறகு இந்த உத்தரவை பிறப்பித்தார். இதன்படி, முறையீட்டு நீதிமன்றத்தின் விடுதலை தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் எழுத்துப்பூர்வ, வாய்மொழி வாதங்களை பராமரிக்கிறது பொது வழக்கு குழு.
இந்த நிலைப்பாடு, எஸ்பிஆர்எம் சட்டப்பிரிவு இயக்குநருமான வான் ஷாருடின் அனுப்பிய கடிதம் மூலம் கூட்டரசு நீதிமன்ற பதிவாளருக்குத் தெரிவிக்கப்பட்டது. கடிதம் இன்று காலை 9.10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் முறையீட்டு நீதிமன்றம் சையட் சாதிக்கை நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தது. இதற்கு முன்பு உயர்நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டு சிறை, 2 பிரம்படி, 10 மில்லியன் அபராதம் விதித்திருந்தது. டிசம்பர் 11-12ஆம் தேதிகளில் கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதிகள் இரு தரப்புக்கும் மறுபரிசீலனை செய்ய கால அவகாசம் வழங்கிய போதிலும், அரசு வழக்கறிஞர் முறையீட்டை தொடர உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



