கொலை குற்றமாக வகை செய்யப்பட்ட மதுபோதையில் ஓட்டி விபத்து
- Surendran Sumdraraj
- 01 Apr, 2026
கிள்ளான், ஏப். 1-
மதுபானம் மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தில், இன்று கிள்ளான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
28 வயதான ஆர். சக்திகணபதி என்ற தொழில்நுட்ப நிபுணர், வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, தமக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புரிந்துகொண்டதாகத் தலையசைத்து தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு, போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டியதால் ஒருவர் உயிரிழந்ததாகும்.
எனினும், கொலை வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ வரம்பிற்குள் வருவதால், குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்து எந்த ஒப்புதலும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிகையின் படி, கடந்த மார்ச் 29ஆம் தேதி, காலை சுமார் 11.47 மணியளவில், கிள்ளான் ஜாலான் ராயா பாராட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த விபத்தில், 33 வயதான அமிருல் ஹபீஸ் ஓமர் என்ற நபர் உயிரிழந்தார்.
இந்த வழக்கு தற்போது மேல்நீதிமன்ற விசாரணைக்காக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



