பொருளாதார மேம்பாடே இந்திய இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் - மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் தேசியத் தலைவர் திரு தனேஷ் பாசில் வலியுறுத்து
- Tamil Malar (Reporter)
- 06 Jan, 2026
பினாங்கு, ஜன. 6 -
மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் பினாங்கு மாநிலத்தின் ஒட்டுமொத்த வருடாந்திர நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மாநில மற்றும் தேசிய அளவில் மன்றத்தின் பெருமையை உயர்த்திய சிறப்புமிக்க இளைஞர்களை அங்கீகரித்து கௌரவிக்கும் நோக்கில் MIYC YOUTH LUMINA நிகழ்ச்சி பெர்ஜாயா ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான ஆர். எஸ். என். ராயர் திறப்புரையாற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பினாங்கு மாநில மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத் தலைவர் ஜனார்த்தனன் வேலாயுதம், மாநில உறுப்பினர்கள் மற்றும் கிளைத் தலைவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளை எடுத்துரைத்தார்.
அதாவது, பினாங்கு மாநிலத்தில் இந்தியர்களை சார்ந்த மாநில அளவிலான பொறுப்புகளில் குறிப்பாக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தமிழ்ப்பள்ளி திட்டக்குழு போன்ற அரசாங்க செயற்குழுக்களில் தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், இத்தகைய இயக்கங்களின் மூலம் தரமுள்ள இளைஞர்களை கண்டறிந்து, அவர்களுக்குத் தமிழர் சார்ந்த அரசாங்கப் பொறுப்புகளை வழங்கினால், மாநில வளர்ச்சிக்கும் இந்திய இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் பெரும் பலனளிக்கும் என நம்பிக்கையுடன் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் தேசிய தலைவர் தனேஷ் பாசில் இந்திய இளைஞர்களிடையே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், MIYC-யிலிருந்து மடானி அரசாங்கத்திற்கு சென்றுள்ள முன்னாள் உறுப்பினரான குமரேசன் ஆறுமுகத்திற்கு சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர், அரசாங்கப் பதவிகளுக்கு சென்றுள்ள ஒவ்வொரு முன்னாள் MIYC உறுப்பினரும் தத்தமது மாநில மன்றங்களுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்றும், நல்ல உறவுமுறையை வளர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பினாங்கு மாநில மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் மற்றும் Syscore Academy இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது.
*Syscore Academy* என்பது STEM மற்றும் ரோபோடிக்ஸ் மையமாக செயல்பட்டு வரும் நிறுவனம் ஆகும். இங்கு இளைஞர்கள் ரோபோட் வடிவமைப்பு, குறியீடு, செயற்கை நுண்ணறிவு, டிரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட எதிர்காலத் திறன்களில் பயிற்சி பெற்று, உலகளாவிய போட்டிகளுக்குத் தயாராகி வருகின்றனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், பினாங்கில் உள்ள இந்திய இளைஞர்கள் STEM துறையில் மேலும் முன்னேறுவதற்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பின் போது தன்னார்வ முயற்சியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உதவிகளை வழங்கி சமூகப்பணியில் முன்மாதிரியாகத் திகழ்ந்த பாகான் கிளை இந்த ஆண்டிற்கான சிறந்த நிகழ்ச்சியினை மேற்கொண்ட கிளை என்ற விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



