வெளிநாட்டு பதிவு வாகனங்களுக்கு RON95 மானிய பெட்ரோல் வாங்கத் தடை
- Tamil Malar (Reporter)
- 28 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 28-
வெளிநாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்கள் RON95 மானிய பெட்ரோலை வாங்குவதைத் தடை செய்யும் புதிய விதிமுறையை உள்நாட்டு வர்த்தகம் அமைச்சு (KPDN) அறிமுகப்படுத்த உள்ளது. இந்த விதிமுறை 1961 ஆம் ஆண்டின் வழங்கல் கட்டுப்பாட்டு சட்டத்தின் (Akta Kawalan Bekalan) பிரிவு 6ன் கீழ் கொண்டு வரப்படுவதுடன், வரும் ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி, இதுவரை நடைமுறையில் இருந்த தடை, வெளிநாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு RON95 மானிய பெட்ரோல் ‘விற்பனை’ செய்வதை மட்டுமே உள்ளடக்கியிருந்தது என விளக்கினார். இதன் காரணமாக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு மட்டுமே இருந்ததுடன், அந்த பெட்ரோலை வாங்கும் வாகன உரிமையாளர்கள் அல்லது பயனாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது என்றார்.
இந்த குறைபாட்டை சரிசெய்யும் நோக்கில் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். புதிய சட்டத்தின் கீழ், பெட்ரோல் நிலையங்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்களின் உரிமையாளர்கள் அல்லது பயனாளர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த நடவடிக்கை, அரசின் மானியச் செலவுகளை கட்டுப்படுத்துவதோடு, மானிய பெட்ரோல் உண்மையில் தகுதியுள்ள உள்ளூர் பயனாளர்களுக்கே கிடைப்பதை உறுதி செய்யும் என அமைச்சர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



