தாய்லாந்தின் 34 ஆண்டு ஆதிக்கத்தை முறியடித்து மலேசியா செப்பாக் தக்ராவ் தங்கம் வென்றது
- Tamil Malar (Reporter)
- 15 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 15-
தாய்லாந்து செப்பாக் தக்ராவ் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆடவர் அணி பிரிவில் தாய்லாந்தின் ஆதிக்கம் நேற்று முடிவுக்கு வந்தது.
2025 தாய்லாந்து சீ கேம்ஸ் இறுதிப் போட்டியில் மலேசியா தாய்லாந்தை 2-1 என தோற்கடித்து, 1991க்குப் பிறகு முதல் தங்கப் பதக்கத்தை வென்றது. இரு ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியமற்றது என கருதப்பட்டது.
தாய்லாந்து ஊடகமான பாங்காக் போஸ்ட் இந்தத் தோல்வியை "ஆச்சரியமான தோல்வி" என விவரித்தது. " அதுவும் பாரம்பரிய எதிரியான மலேசியாவிடம் ஆடவர் அணி ரெகு இறுதியாட்டத்தில் தோல்வி ஆச்சரியமளிக்கிறது. இது தாய்லாந்தின் 34 ஆண்டு ஆதிக்கத்தை திடீரென முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது" என்று அந்த அறிக்கை கூறியது.
நகோன் பத்தோம் ஜிம்னாசியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் மலேசியாவின் முதல் ரெகு தோல்வியடைந்த போதிலும், இரண்டாவது, மூன்றாவது ரெகு அபார வெற்றி பெற்று வரலாறு படைத்தன. இவ்வெற்றி தாய்லாந்து மண்ணில் இன்னும் இனிமையானது என மலேசிய செப்பாக் தக்ராவ் சங்கத் தலைவர் டத்தோ முகமட் சுமாலி ரெடுவான் கூறினார்.
மலேசிய வீரர்கள் ஹாசிக் ஹைருல் நிசாம், முகமட் நோரைசாட் முகமட் நோர்டின், அமிருல் சாஸ்வான் அமிர் உள்ளிட்டோர் அசத்தினர். இவ்வெற்றி மலேசிய விளையாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



