மலேசியத் தமிழ்க் கல்விச் சவால்களும் எதிர்காலப் பார்வையும்! – கருத்தரங்கு!
- Thinagaren Sanggaren
- 19 Nov, 2025
நவம்பர் 19,
மலேசியாவில் 200 ஆண்டுகள் கடந்து நிலைத்திருக்கும் தமிழ்க்கல்வியின் எதிர்காலம் குறித்தும் எதிர்நோக்கவிருக்கும் சவால்கள் குறித்தும் கருத்தரங்கம் ஒன்றை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் தான் ஸ்ரீ கே ஆர் சோமா அறவாரியமும் இணைந்து எதிர்வரும் 13 டிசம்பர் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் DKA அரங்கில் காலை 8.30 முதல் பிற்பகல் 12.30 வரையில் நடைபெறுகிறது.
தமிழ் மொழியைத் தொடர்பு மொழியாக மட்டுமே கருதாமல் மனித நாகரீகத்துடன் பயணிக்கும் இலக்கியப் பெருங்கடல், நம் இன அடையாளத்தின் உயிர்மூலம், தமிழர் பண்பாட்டின் அழியாச் செல்வம் என்றாலும் அடுத்த தலைமுறைக்குத் தமிழ்மொழியின் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைக்க வேண்டிய கடப்பாட்டை நாம் அனைவரும் கொண்டிருப்பதால் மலாயாப் பல்கலைக்கழகத்தில் 13 டிசம்பர் நடைபெறவிருக்கும் மலேசியத் தமிழ்க் கல்விச் சவால்களும் எதிர்காலப் பார்வையும் எனும் கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என அனைத்து தமிழ் உள்ளங்களையும் இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் ரவிந்திரன் மாரையா கேட்டுக்கொண்டார்.
ஆரம்பப் பள்ளியில் தமிழ்க் கல்வியின் நிலை, இடைநிலைப் பள்ளியில் தமிழ்க் கல்வியின் நிலை, உயர்கல்விக் கூடங்களில் தமிழ் கல்வியின் நிலை என 3 அங்கங்களாக இக்கருத்தரங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணை பேராசிரியர் முனைவர் மோகனதாஸ் ராமசாமி, முனைவர் அகிலன் சுப்ரமணியம், திரு அ. ச. பாஸ்கரன் ஆகிய கல்விமான்கள் சிறப்புப் பேச்சாளர்களாகப் பங்கேற்பதால் உயர்தகு நிலையிலான பல்வேறு கருத்துகளும் தீர்வுகளும் பெறும் சிறந்த கருத்தரங்காக இக்கருத்தரங்கு அமையும் என மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் ரவிந்திரன் மாரையா தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



