387 தமிழ்ப்பள்ளிகளுக்கு 400 திறன்பலகைகள், மித்ராவின் ஏற்பாட்டில் மடானி அரசு வழங்கியது
- Tamil Malar (Reporter)
- 10 Dec, 2025
செய்தி -வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், டிச. 10-
நாட்டிலுள்ள 387 தமிழ்ப்பள்ளிகளுக்கு மொத்தம் 400 திறன்பலகைகளை
மடானி அரசு வழங்கவுள்ளது. அதன் முதல் முன்னோட்டமாக நேற்று தலைநகர் கோலாலம்பூர், விவேகானந்தா
தமிழ்ப்பள்ளியின் கந்தையா மண்டபத்தில் கூட்டரசு பிரதேச, சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி
தலைமையாசிரியர்களிடம் திறன்பலகை வழங்கும் அறிமுக விழா மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் படிலீனா சாடிக் தமதுரையில்,
இதற்கு முன்புள்ள அரசுகளில் தமிழ்ப்பள்ளிகளும் சீனப்பள்ளிகளும் துணையமைச்சர் பொறுப்பில்
இருக்க மலாய் பள்ளிகள் மேம்பாடு அமைச்சரின் பொறுப்பில் இருக்கும். ஆனால் இன்றைய மடானி
அரசாங்கத்தில் அமைச்சரும் துணையமைச்சரும் இணைந்தே இன பாகுபாடின்றி நாட்டிலுள்ள அனைத்து
பள்ளிகளின் மேம்பாடுகளையும் கவனித்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் மடானி அரசாங்கம் பொறுப்பில் இருக்கும் வரையில் இந்த
நாட்டில் ஒரு தமிழ்ப்பள்ளி கூட மூடப்படாது என அவர் மேலும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஏனெனில் வெர்னாகுலர் பள்ளிகளின் அங்கீகாரமும், நிலைத்தன்மையை உறுதி செய்யும் மான்பும்
கல்வி சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ஆகவே அதைக் காக்க பிரதமரின் தலைமையில் நிச்சயமாக
பாடுபடுவோம் என கல்வி அமைச்சர் கூற அரங்கத்தில் உள்ளவர்கள் உற்சாகத்தில் கைதட்டினர்.
பிரதமரைப் பொறுத்தவரையில் கல்விக்கு அதிகம் முக்கியத்துவம்
அளிப்பார். மேலும் இன்றைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக போடப்படும் விதை எதிர்காலத்தில்
விருட்சமாக மாறி நாட்டை வலப்படுத்தும் என அவர் பெரிதும் நம்புகிறார். அதற்கான செயல்திட்டங்களை
வகுத்து பாடுபட்டும் வருகிறார். ஆனால் இதையெல்லாம் உணராது சிலர் தவறாகப் பேசுவது சரியில்லை
என அமைச்சர் கூறினார். நன்மைகள் செய்பவர்களுக்கு நாம் காட்டுகின்ற நன்றியுணர்வுதான்
அவர்களை மென்மேலும் நல்ல காரியங்களைச் செய்ய வழிவகுக்கும் என அனைவரும் உணர வேண்டும்
என அவர் மேலும் வலியுறுத்தினார்.
இன்றைய உலகம் செய்யறிவை நோக்கி பயணித்து வருகிறது. அதைக்
கருத்தில் கொண்டு அரசும் கல்வியமைச்சும் இணைந்து திவெட் திட்டத்தின் வழி திறன்கல்வியை
மேம்படுத்த பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. மேலும் இந்த திறன்பலகை வழங்கும்
திட்டம் நிச்சயமாக பள்ளிகள் தங்கள் மாணவர்களை நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வார்த்தெடுக்க
இலகுவாக இருக்கும் என அமைச்சு நம்புகிறது. அதன் அடிப்படையில் இத்திட்டத்தின் முதல்
கட்டமாக 800 மாணவர்களுக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் தமிழ்ப்பள்ளிகளுக்கு 2 திறன்பலகைகளும்
800க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு திறன்பலகையும் வழங்க
முடிவெடுத்து செயல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக படீலீனா சிடேக் தெரிவித்தார்.
இதனிடையே நீண்ட காலமாகத் தீர்வுகள் கிடைக்காத 5 தமிழ்ப்பள்ளிகளின்
பிரச்சினைகளுக்குக் கூடிய விரைவில் தீர்வு பிறக்கவுள்ளதாக அமைச்சர் கோடிகாட்டினார்.
அதன் முதல்கட்ட நகர்வாக சுங்கை பாக்காப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக
கூறிய அமைச்சர், லாடாங் ஜெராம் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணி அடுத்த ஆண்டு தொடங்கப்படும்
என நம்பிக்கைத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி எஸ்பிஎம் தேர்வில் 10ஏக்கள் பெறுகின்ற
மாணவர்களுக்கு நிச்சயமாக மெட்ரிகுலேஷனில் நிச்சயமாகக் கல்வியினைத் தொடரலாம் என அவர்
குறிப்பிட்டார்.
இந்தத் திறன்பலகை வழங்கும் நிகழ்ச்சியை மித்ரா, நாட்டு திடக்
கல்வி அறக்கட்டளையும் கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில்
கல்வி அமைச்சர் படீலினா சாடிக், தொழில்முனைவர், கூட்டுறவு
வளர்ச்சி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், கல்வித் துணை
அமைச்சர் வோங் காக் வோ, மித்ராவின் இயக்குநர் பிரபாகரன், நாட்டு திடக் கல்வி அறக்கட்டளையின்
தலைமை செயல்முறை அதிகாரி முகமட் ரசி ஜாபர், கூட்டரசு பிரதேச கல்வி இயக்குநர், கல்வி
அமைச்சின் அதிகாரிகள், கோலாலம்பூர், கூட்டரசு
பிரதேச தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் உட்பட
பலர் கலந்து சிறப்பித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



