தேசிய அளவிலான ROBOTIK போட்டியில் சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி வெற்றி!
- Thinagaren Sanggaren
- 23 Nov, 2025
நவம்பர் 23,
தேசிய அளவில் நடத்தப்பட்ட எந்திரவியல் புத்தாக்கப் போட்டியில் பினாங்கின் சுங்கை ஆரா தமிழ்பள்ளி முதலிடத்தில் வெற்றிப் பெற்றது. மலேசிய மக்கள் நல சேவை கழகத்தின் ஏற்பாட்டில் ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவுடன் நேற்று தலைநகர் ADTEC JTM தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான எந்திரவியல் போட்டி காலை 8 மணி முதல் மாலை 6 வரையில் நடைபெற்றது. மலேசியா முழுவதும் 100 க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இப்போட்டியில் பங்கேற்றதில் முதல் 20 தமிழ்ப்பள்ளிகளுக்குக் காசோலையுடன் தொழில்நுட்பச் சாதனங்களும் பரிசாக வழங்கப்பட்டது.
ஓம்ஸ் அறவாரியத்தின் துணைத் தலைவரும் தொழிலதிபருமான AG திலகன் அருணாச்சலம் இப்போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இப்போட்டியின் மூலமாகத் தொழில்நுட்பத்தின் மீதான நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கொண்டிருக்கும் அதீத ஆர்வம் மேலும் மிகுந்திருப்பதாகப் போட்டியின் இயக்குநர் DR.GANESAN MURUGESU தெரிவித்தார். பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட இப்போட்டியில் மாணவர்களின் பங்களிப்பு நிறைவாக இருந்ததாகவும் இதன் தொடர்ச்சியாக அனைத்துலக அளவிலான எந்திரவியல் போட்டிகளிலும் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் மலேசிய மக்கள் நல சேவை கழகம் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்றும் DR.GANESAN MURUGESU நம்பிக்கை அளித்தார்.
கல்விப் புத்தாக்கத்தில் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பின்தங்கி விடாமல் அரிய பல்வேறு நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருவதை மக்கள் நல சேவை கழகத்தின் தலைவர் கந்தன் சாமிநாதன் புகழாரம் சூட்டினார். 9 மாநிலங்களிலிருந்து தமிழ்ப்பள்ளிகளத் திரட்டி அவர்களைப் போட்டிக்கு அழைத்து வந்திருக்கும் ஆசிரியர்களுக்கும் மக்கள் நல சேவை கழகத்தின் மாநிலங்கவை உறுப்பினர்களுக்கும் அதன் தலைவர் கந்தன் சாமிநாதன் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். இப்போட்டிக்கு ஆதரவளித்திருக்கும் ஓம்ஸ் அறவாரியத்திற்கும் மற்றும் பல ஆர்வலர்களுக்கும் தனது நன்றியைக் கந்தன் சாமிநாதன் தெரிவித்துக்கொண்டார்.
ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால் ஓம்ஸ் பா தியாகராஜன் இன்றை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றாலும் அவர் என்றென்றும் தமிழ்ப்பள்ளிகளுக்காக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என ஓம்ஸ் அறவாரியத்தின் துணைத் தலைவர் AG திலகன் அருணாச்சலம் தெரிவித்தார். மாணவர்களின் திறனை மேம்படுத்து அரிய முயற்சியாக இப்போட்டி திகழ்வதாகவும் தொடர்ந்து மாணவர்கள் இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்கிற உத்திகளைக் கற்று தேர்ந்து நம் சமூகத்திற்குப் பயனான வகையில் செயல்பட வேண்டும் என AG திலகன் அருணாச்சலம் கேட்டுக்கொண்டார். தேசிய அளவில் நடத்தப்பட்ட எந்திரவியல் போட்டியில் BATANG MELAKA தமிழ்ப்பள்ளி 5 –ஆவது இடத்திலும் , BUKIT MERTAJAM தமிழ்ப்பள்ளி 4–ஆவது இடத்திலும், BATANG MELAKA தமிழ்ப்பள்ளி 3–ஆவது இடத்திலும், BANDAR SERI ALAM தமிழ்ப்பள்ளி 2–ஆவது இடத்திலும், SUNGAI ARA முதல் இடத்திலும் வெற்றிப் பெற்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



