சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த மனு; விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
- Surendran Sumdraraj
- 16 Apr, 2026
யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் மீது தமிழக அரசு விதித்துள்ள குண்டர் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது. சவுக்கு சங்கரின் உறவினர் தாக்கல் செய்த மனுவில், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மனுவை நேரடியாக விசாரிக்க முடியாது என தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, முதலில் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.
நீதிபதிகள் திபாங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தபோது, இதுபோன்ற வழக்குகளை ஆய்வு செய்ய உரிய இடம் உயர்நீதிமன்றமே என்றும், அங்கு விரைவாக விசாரணை நடத்த கோரலாம் என்றும் தெரிவித்தது. இதனால் சவுக்கு சங்கர் தரப்புக்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீது அண்மையில் மூன்றாவது முறையாக குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பும் அவர்மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் தடுப்புக் காவல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



