கோலாலம்பூரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – 1.1 பில்லியன் மதிப்புள்ள 1.08 மில்லியன் கிலோ போதைப்பொருள் பறிமுதல்
- Tamil Malar (Reporter)
- 12 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 12-
கடந்த ஆண்டு முழுவதும் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் மூலம், சுமார் 1.08 மில்லியன் கிலோகிராம் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சஸ் தெரிவித்தார். இவை அனைத்தின் மொத்த சந்தை மதிப்பு 1.1 பில்லியன்-ஐத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள், கடந்த ஆண்டு முழுவதும் பதிவான 18,352 போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். இதே காலகட்டத்தில், போதைப்பொருள் குற்றப் புலனாய்வு துறை (JSJN) நடத்திய சோதனைகளின் போது, மொத்தம் 20,540 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று கோலாலம்பூர் காவல் துறை தலைமையகம் (IPK Kuala Lumpur)-இல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், இந்த நடவடிக்கைகள் 1952 போதைப்பொருள் அபாயச் சட்டம், 1985 சிறப்பு தடுப்பு நடவடிக்கைச் சட்டம், 1988 சொத்து பறிமுதல் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கினார்.
மேலும், மீண்டும் மீண்டும் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய 498 நபர்களுக்கு எதிராக, 1952 போதைப்பொருள் அபாயச் சட்டத்தின் பிரிவு 39C-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாடில் கூறினார். இந்தப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மூன்று அடிகளுக்கு மேற்படாத பிரம்படியும் விதிக்கப்படும்.
போதைப்பொருள் குற்றங்களை முற்றிலும் ஒழிப்பதே காவல்துறையின் முக்கிய இலக்கு என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்தப் போராட்டம் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



