இஸ்கண்டார் புத்ரியில் 'ஓப் மோட்டோர் சைக்கிள்' நடவடிக்கை 26 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

இஸ்கண்டார் புத்ரி, ஆக. 25-

இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு, பெட்ரோனாஸ் எரிபொருள் நிலையம் (லெபுராயா லிங்க் -2 துவாஸ் திசை) பகுதியில் 'ஒப் மோட்டோசைக்கிள்' நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலை, இளைஞர்கள் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் தளமாக அடையாளம் காணப்பட்டிருந்தது.

இந்நடவடிக்கை, சாலையில் இன்னும் பரவி வரும் 'மாட் ரெம்பிட் செயல்களைத் தடுக்கவும், பிற சாலைப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டது. ஒரு
போலீஸ் உயரதிகாரியும், எட்டு போலீஸ் அதிகாரிகளும், இஸ்கண்டார் புத்ரி போக்குவரத்து பிரிவினரும் தஞ்சோங் குபாங் போலீஸ் நிலையத்தினரும் இணைந்து செயல்பட்டனர். செயல்பாட்டில் மொத்தம் 26 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 15 முதல் 25 வயதுக்குட்பட்ட 27 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.

பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக 50 சம்மன்கள் வழங்கப்பட்டன. அதேசமயம், வாகன கட்டமைப்பில் சட்டவிரோத மாற்றங்கள் (எக்ஸாஸ்), தவறான பதிவு எண்கள், ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டுதல், பக்கக்கண்ணாடி இல்லாமை, காப்பீடு பாதுகாப்பு இல்லாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 21 மோட்டார் சைக்கிள்கள் சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 (பிரிவு 64) கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. குமரேசன் முனியாண்டி, பெற்றோரும் பாதுகாவலர்களும் தங்கள் பிள்ளைகளின் இயக்கங்களை, குறிப்பாக மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தும் போது, கடுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இளம் தலைமுறை 'மாட் ரெம்பிட் நடவடிக்கைகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றும், இது விபத்துக்களை ஏற்படுத்தும் அபாயம் மிகுந்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.

போலீஸ் தரப்பில், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், சட்டவிரோத பந்தயங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிப்படுத்தவும் உறுதி தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *