தலைமைக் கணக்காய்வாளரின் நியமனம் சட்டவிரோதமானது-எதிர்க்கட்சி குற்றச்சாட்டு!
- Muthu Kumar
- 24 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 24-
தலைமைக் கணக்காய்வாளராக வான் சுராயா வான் முகமது ரட்ஸி நியமிக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சியினரின் தலைமைக் கொறடாவான தக்கியூடின் ஹசான் நேற்று கேள்வி எழுப்பினார். அரசுப் பணியாளரான அவரின் நியமனம் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என்பதோடு சுயநலப் போக்கிற்கும் வழிகோலக்கூடியது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
தலைமைக் கணக்காய்வாளரின் நியமனம் பொதுச்சேவைத்துறைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டியது அவசியம் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான தக்கியூடின் குறிப்பிட்டார்.மக்களைவையில் 2025 தலைமைக் கணக்காய்வாளரின் இரண்டாவது அறிக்கைத் தொகுப்பு மீது நடைபெற்ற விவாதத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார். தலைமைக்
கண்காய்வாளரின் நியமனம் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படக்கூடிய ஒன்றாகும். கூட்டரசு அரமைப்புச் சட்டத்தின் 105(4) இன் கீழ் அப்பதவிக்கான நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.தலைமைக் கணக்காய்வாளரின் ஊதியத்தை ஒருங்கிணைந்த நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டுமென்று அச்சட்டவிதி வலியுறுத்துகிறது. ஆகவே, பொதுச்சேவைத்துறையில் இன்னும் சேவையாற்றிக் கொண்டிருக்கும் ஒருவர் தலைமைக் கணக்காய்வாளர் பதவியை ஏற்க முடியாது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது என்றார் தக்கியூடின்.
தலைமைக் கணக்காய்வாளரின் சுதந்திரத்தையும் நடுநிலைத்தன்மையையும் கட்டிக் காப்பதற்கு அவரின் ஊதியத்தையும் ஓய்வூதியத் தொகையையும் நிரந்தரப்படுத்த வேண்டும். அதனைக் குறைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்குக் கிடையாது. உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவிநீக்கம் செய்ய கடைப்பிடிக்கப்படும் 4 அதே பாணியைத் தவிர,வேறுவகையில் அவரைப் பணிநீக்கம் செய்ய முடியாது என்று தக்கியூடின் சொன்னார்.
கூட்டரசு அமைப்புச் சட்டத்தின்கீழ் வரும் தலைமைக் கணக்காய்வாளரின் பொறுப்பு அரசு நிர்வாகத்தின் பிடியிலிருந்து முற்றாக விலகியிருத்தல் வேண்டும் என்று தக்கியூடின் கூறினார்.வான் சுராயாவின் சட்டத்தின்கீழ் செல்லுபடியாகாது. இதனால், வான் சுராயாவினால் உறுதிசெய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையும் செல்லத்தக்கது அல்ல என்றே கருதப்படும் என்றார்.
மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கையின்படி, அரசாங்க நிதியான நாற்பத்தாறு கோடி வெள்ளி செலவிடப்பட்ட விவகாரத்தில் பல குளறுபடிகள் நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. நில ஒப்பந்தங்கள், பல்கலைக்கழக டெண்டர்கள், தற்காப்புத்துறை ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்காக அப்பணம் செலவிடப்பட்டுள்ளது. அவை பெல்கிரா பெர்ஹாட், மலேசிய தேசியப் பல்கலைக்கழகம், ராணுவம் ஆகியவை அந்த விவகாரத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



