அம்னோ தலைவர்களுக்கு எதிராக அவதூறுகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை பாயும்!

top-news
FREE WEBSITE AD

மஞ்சோங், ஜூலை 7-

அம்னோ தலைவர்களின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அல்லது அவர்களுக்கு எதிராக அவதூறுகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அதன் தலைமைச் செயலாளர் அஸ்ராஃப் வஜ்டி டுசுக்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்சி மற்றும் அதன் தலைவர்களை சம்பந்தப்படுத்தி அவதூறாக பேசப்படுவதை கவனிக்கவும் கண்காணிக்கவும் அம்னோ தலைமையகத்தில் ஒரு சட்டச் செயலகம் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“அம்னோ பாரம்பரியமாக வழக்குகள் அல்லது சட்ட நோட்டீஸ்களை நாடுவதில்லை. ஆனால், எங்களின் தலைவர்களைத் தாக்க சமூக ஊடகங்கள் பரவலாக தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, கட்சி இன்னும் உறுதியுடன் பதிலளிக்க இதுதான் சரியான நேரம்" என்று அவர்
தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் அம்னோ தொகுதிக் கூட்டத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அஸ்ராஃப் இதனைத் தெரிவித்தார். "பொறுப்பற்ற நபர்களை பொறுப்பேற்க வைப்பதற்கான ஒரே வழி இதுதான் என்று அம்னோ கருதுகிறது" என்று கூறிய அஸ்ராஃப், கடந்த காலங்களில் இதர அரசியல் கட்சிகள் தங்கள் மீதான தவறான குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்மறையான கருத்துகளை எதிர்கொள்ள சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதை சுட்டிக் காட்டினார்.

இதனிடையே, நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் ஓர் அங்கமாக, தங்கள் சொந்தத் தொகுதிகளுக்கு வெளியே வசிக்கும் வாக்காளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு வியூக முன்முயற்சியாக, "வெளிமாநில வாக்காளர் பிரிவை" அமைக்கவும் அம்னோ முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.

சில மாநிலங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டு வாக்காளர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு போன்ற அதிக அடர்த்தி கொண்ட நகர்ப்புறங்களில் வசிப்பதாக அவர் குறிப்பிட்டார்."இப்பிரிவை அமைப்பது குறித்து புக்கிட் பிந்தாங் தொகுதியில் இருந்து வந்த ஒரு பரிந்துரையை, அண்மையில் நடந்த அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் நாங்கள் அங்கீகரித்தோம்.

"இப்பிரிவானது, இலக்கிடப்பட்டுள்ள திட்டங்களை மேற்கொள்ளவும் அம்னோவும் தேசிய முன்னணியும் வெற்றிபெற விரும்பும் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கவும் எங்களுக்கு உதவும்" என்று அஸ்ராஃப் தெரிவித்தார்.

UMNO akan ambil tindakan undang-undang terhadap individu yang menyebar fitnah terhadap pemimpin parti. Setiausaha Agung Asyraf Wajdi berkata, unit undang-undang ditubuhkan bagi memantau isu ini. UMNO juga tubuh unit pengundi luar kawasan sebagai persediaan PRU16.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *