சிலாங்கூரில் பல ஆண்டுகளாக தொடரும் பிரச்னை! - சுல்தான் வருத்தம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 20: சிலாங்கூர் மாநிலத்தில் தொடரும் வெள்ளப் பிரச்சனைகளைக் கையாள்வதில் மாநில அரசு தொடர்ந்து தோல்வியடைந்து வருவது குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சனை பல ஆண்டுகளாகத் தொடர்வதாகவும், இது தொடர்பாகத் தான் அளித்த ஆலோசனைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் சுல்தான் ஷரஃபுதீன் கூறினார்.

சிலாங்கூரில் கடந்த ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகள் RM52.9 மில்லியனாக இருந்தது. இது 2024-ல் பதிவான RM22.6 மில்லியனை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப் பிரச்சனைகளைக் கையாள்வதற்காக நிதி ஒதுக்கப்படுகிறது, ஆனால் அதன் முடிவுகள் திருப்தியற்றதாகவே இருக்கின்றன என்று சுல்தான் ஷரஃபுதீன் கூறினார்.

மக்கள், குறிப்பாகக் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள், தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்  என்று சிலாங்கூர் மாநிலச் செயலகக் கட்டிடத்தில் நடைபெற்ற 15-வது மாநில சட்டமன்றத்தின் நான்காவது அமர்வின் தொடக்க விழாவில் அவர் கூறினார்.

விரிவான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால செயல் திட்டங்களை வகுப்பதன் மூலம், மாநிலத்தின் வெள்ளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாநில அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

மாநிலத்தின் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, மக்களுக்குப் போதுமான அளவு சுத்தமான நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக கிள்ளான்  ஆற்றைச் சுத்தம் செய்யுமாறு சுல்தான் உத்தரவிட்டார்.

மாநிலத்தின் வெள்ளம் மற்றும் நீர் விநியோகப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை, நடவடிக்கை எடுக்கக் கோருவதை நிறுத்தப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

தங்களைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசு தோல்வியடைவது குறித்து மக்களிடமிருந்து தனக்கு அடிக்கடி புகார்கள் வருவதாகவும் சுல்தான் கூறினார்.

இத்தகைய பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாத வகையில், மேலும் முறையான, ஒருங்கிணைந்த மற்றும் பயனுள்ள அணுகுமுறையை அவர் வலியுறுத்தினார்.

மாநில அரசின் கொள்கைகள் எப்போதும் சிலாங்கூர் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

செயலில்லாமல் வெறும் பேச்சோடு நின்றுவிடாதீர்கள், மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்க விடாதீர்கள் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *