உப்சி விபத்து; விரைவுப் பேருந்து நடத்துநருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள்!
- Muthu Kumar
- 20 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 20-
கடந்த மாதம் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் உப்சியைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழந்த விபத்திற்குக் காரணமான விரைவுப் பேருந்து நடத்துநருக்கு எதிராக எடுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளை சாலைப் போக்குவரத்துத் துறை ஆராய்ந்து வருகிறது.
நேற்று போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட அச்சம்பவம் தொடர்பிலான சிறப்புப் பணிக்குழுவின் தொடக்கக்கட்ட அறிக்கையைத் தொடர்ந்து அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஏடிபட்லி ரம்லி அவ்வாறு கூறினார்.
பேருந்து நிறுவனத்தின் பெர்மிட்டை ரத்து செய்ய தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து ஜேபிஜே நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் பேருந்து ஓட்டுநர் தற்போது நீதிமன்ற செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் டத்தோ ஏடி பட்லி ராம்லி தெரிவித்தார். தொடக்கக்கட்ட
அறிக்கையின் அடிப்படையில் முழு விவகாரத்தையும் ஆராய்ந்து ஜேபிஜே அல்லது அரச மலேசிய போலீஸ் படை மட்டுமின்றி நாட்டின் சாலைப் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்த பிற நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட வேகவரம்பைக் காட்டிலும் பேருந்து இரு மடங்கு வேகமாகச் சென்றதும் விபத்துக்கான காரணங்களில் ஒன்றாகும் என்று நேற்று வெளியிட்ட விபத்து குறித்து தொடக்கக்கட்ட அறிக்கையில் தெரிய வந்திருந்தது.கடந்த ஜூன் 9ஆம் தேதி, ஜெர்த்தேயிலிருந்து பேராக், தஞ்சோங் மாலிமிற்கு 42 உப்சி பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



