புத்ராஜெயா, பிப். 13-
ஒருங்கிணைந்த முறையில் “உண்மையற்ற நடத்தை” (Coordinated Inauthentic Behaviour – CIB) என சந்தேகிக்கப்படும் இனவாத உள்ளடக்கங்களைப் பரப்பியதாக, மலேசிய தகவல் தொடர்பு ஆணையம் (MCMC) 24 மணிநேரத்திற்குள் பல சமூக ஊடக கணக்குகளை அடையாளம் கண்டுள்ளது.
ஒற்றுமை அரசின் செய்தித் தொடர்பாளர், டத்தோக் பஹ்மி பட்சில் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகள் மற்றும் 10-க்கும் அதிகமான டிக் டாக் கணக்குகள் ஒரே வீடியோவையும் ஒரே மாதிரியான கதையையும் பயன்படுத்தி திட்டமிட்ட முறையில் பரப்பியதாகத் தெரியவந்துள்ளது.
அந்த வைரல் செய்தியில், ஒரு இந்திய “கேங்ஸ்டர்” மலாய் நில உரிமையாளரை காயப்படுத்தியதாக கூறப்பட்டு, அதில் இனவாதத் தூண்டுதலான கருத்துகள் சேர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“கடந்த 24 மணிநேரத்தில், இந்தியர்–மலாய் நபர்கள் தொடர்புடையதாக கூறப்படும் ஒரு சம்பவத்தை வைத்து இனவாதத் தன்மை கொண்ட விதத்தில் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. பெரும்பாலான பதிவுகளில் அதே வீடியோவும் அதே வாசகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன,” என்று அவர் அமைச்சரவை கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இந்த விவகாரத்தில் MCMC தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.



