மின்சார கட்டணத்தை குறைக்க ‘Time of Use’ திட்டம்
- Surendran Sumdraraj
- 10 Apr, 2026
புத்ராஜெயா, ஏப். 10-
உலகளாவிய ஆற்றல் விலைகளின் மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, மின்சார பயன்பாட்டில் சிக்கனத்தை உருவாக்கும் நோக்கில் ‘Time of Use’ (ToU) திட்டத்திற்கு மக்களை மாற்ற அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த திட்டம் மூலம் மக்கள் தங்கள் மின்சார பயன்பாட்டை திட்டமிட்டு மாற்றுவதன் மூலம் கட்டணத்தை குறைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆற்றல் மாற்றம் மற்றும் நீர்வள மாற்ற அமைச்சு (PETRA) வெளியிட்ட அறிக்கையில், கடந்த பிப்ரவரி மாதம் வரை 1,28,868 பயனர்கள் ToU திட்டத்திற்கு மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதை காட்டுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், மின்சார கட்டணங்கள் பயன்படுத்தும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு மாறுபடும். குறிப்பாக, வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அதிக பயன்பாடு இருக்கும் ‘பீக்’ நேரமாக கருதப்படுவதால், அந்த நேரத்தில் கட்டணம் அதிகமாக இருக்கும். இதற்கு மாறாக, மற்ற நேரங்களில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படும்.
இதனால், வீட்டு உபயோக மின்சார சாதனங்களை ‘ஆப்-பீக்’ நேரங்களில் பயன்படுத்தும் பழக்கத்தை மக்கள் உருவாக்கினால், மின்சார செலவில் கணிசமான சேமிப்பு ஏற்படும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



