ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்: அனுமதி தந்த ஈரான் - ஆனால் 5 நாடுகளுக்கு மட்டும்தான்!

top-news
FREE WEBSITE AD

மத்திய கிழக்கில் இப்போது ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து நார்மலாக இல்லாததால் அது சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக இந்தியாவிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்தியா உட்பட 5 நாடுகளின் கப்பல்களுக்கு எந்தவொரு தடையும் இல்லை என ஈரான் கூறியுள்ளது.

இஸ்ரேல்- ஈரான் இடையேயான போர் 4வது வாரமாகத் தொடர்கிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு நடுவே ஹார்முஸ் ஜலசந்தியும் கூட முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் பெருமளவு கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கப்பல்களுக்கு உயிர்நாடியாக ஹார்முஸ் உள்ள சூழலில், இது உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் எந்த நாட்டை சேர்ந்த கப்பல் போகலாம்.. எந்த நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் போகக்கூடாது என்பதில் குழப்பம் இருந்து வந்தது. இதற்கிடையே இது தொடர்பாக ஈரான் விளக்கமளித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியா உட்பட ஐந்து நட்பு நாடுகளின் கப்பல்களுக்குத் தடை இல்லை என ஈரான் அறிவித்தது. இந்தியாவுடன் சேர்ந்து ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி முற்றிலும் மூடப்படவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி குறிப்பிட்டார். நட்புணர்வு கொண்ட பல நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பல கப்பல் உரிமையாளர்களும் நாடுகளும் பாதுகாப்பான வழித்தடத்தை உறுதி செய்ய எங்களைத் தொடர்பு கொண்டன. நட்பு நாடுகள் அல்லது வேறு காரணங்களுக்காக, எங்கள் ஆயுதப் படைகள் அவர்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை வழங்கின.

சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக், இந்தியா, பங்களாதேஷ் உட்பட பல நாடுகள் எங்களுடன் பேசி ஒருங்கிணைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியக் கப்பல்கள் பத்திரமாக ஹார்முஸை கடந்து சென்றன. இந்த ஒத்துழைப்பு போருக்குப் பிறகும் தொடரும். ஆனால், அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு மோதலில் ஈடுபடும் வளைகுடா நாடுகளின் கப்பல்களுக்கு, போர் சூழ்நிலை நிலவும் இந்த ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதி இல்லை.

நாம் போரில் இருக்கிறோம். இப்பிராந்தியம் போர்ப் பகுதியாகும். எங்கள் எதிரிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் கப்பல்களை அனுமதிக்க எந்தக் காரணமும் இல்லை. அதேநேரம் மற்றவர்களுக்கு இது திறந்திருக்கும். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ஈரான் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டியதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

ஹார்முஸ் பகுதியில் குறிப்பிட்ட நாடுகளின் கப்பல்களுக்குத் தடையை அறிவித்தபோது பலரும் அதை நம்பவில்லை.. சும்மா வாய் சவடால் விடுகிறார்கள் என்றே நினைத்தனர். ஆனால், காலப்போக்கில், ஈரான் தனது பலத்தையும் ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான அதிகாரத்தையும் நிரூபித்தது. அதைத் தடுக்க எதிரி நாடுகள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

நாங்கள் முதலில் இதை அறிவித்தபோது அத்தகைய செயலைச் செய்ய ஈரானுக்குத் தைரியம் இல்லை என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அதை நாங்கள் வலிமையுடன் செய்தோம். எங்களைத் தடுக்க என்னவெல்லாமோ செய்ய முயன்றனர். ஆனால், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. யார் யாரிடமோ எல்லாம் கேட்டனர். ஆனால், எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய டிரம்ப் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். குறிப்பாக நேட்டோ நாடுகள் தங்கள் கடற்படையை அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இருப்பினும், நேட்டோ நாடுகள் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *