இஸ்ரேல் மிகப்பெரிய எண்ணெய் ஆலையை தாக்கிய ஈரான் மற்றும் மின்சாரம் துண்டிப்பு!
- Muthu Kumar
- 20 Mar, 2026
இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.எண்ணெய் ஆலையில் புகை மண்டலங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பெரியளவு சேதம் இல்லை என இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆலை அந்நாட்டின் 60% டீசல், 50% பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இஸ்ரேலில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது கடந்த மாதம் 28 ஆம் தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம், அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்தது. அதைத்தொடர்ந்து வளைகுடா பிராந்தியம் முழுவதும் மூண்டுள்ள போரில் ஈரானில் 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய தலைவர்களும் உயிரிழந்து உள்ளனர்.
இதில் மற்றுமொரு இழப்பாக அந்த நாட்டின் உச்சபட்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் பலியானார். நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரான இவர், டிரம்ப் நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட அணுசக்தி பேச்சுவார்த்தையில், கொல்லப்பட்ட அயதுல்லா அலி காமேனிக்கு ஆலோசகராக செயல்பட்டு வந்தார். அந்தவகையில் ஈரானின் மிகவும் அதிகாரம் கொண்ட நபராகவும் இருந்தார்.
இதேபோல ஈரானின் புரட்சிகர ராணுவத்தின் தலைவர் ஜெனரல் கோலம் ரெசா சுலைமானியும் நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர்கள் இருவரும் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் பலியாகினர். எனவே இருவரின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் ஈரான் நேற்று தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. குறிப்பாக இஸ்ரேல் மீது கொத்துக் குண்டுகளை வீசி அதிர வைத்தது. தவிர ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) நிலையங்களில் ஒன்றான ராஸ் லஃபானை ஈரான் தாக்கியுள்ளது. கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரானிலிருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளால் ராஸ் லஃபான் பெரும் சேதம் அடைந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதன் விளைவாக, நாட்டின் எரிபொருள் தேவையின் கணிசமான பகுதியை வழங்கும் அந்த நிலையத்தில் மின்வெட்டும் தீ விபத்துகளும் ஏற்பட்டன.
முதல் முறையாக 'Nasrallah' வகை ஏவுகணை அமைப்பைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. இதில் இஸ்ரேலின் ஹைஃபா மற்றும் அஷ்டோட் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.ஈரான் நடத்திய தாக்குதால் கடும் கோபம் அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீண்டும் கத்தாரை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தினால் மட்டுமே சவுத் பார்ஸ் எண்ணெய் வயலில் இஸ்ரேல் மீண்டும் தாக்கும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், இஸ்ரேலின் உதவி இல்லாமலேயே அமெரிக்கா, பெரிய அளவில் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கும்" என்று எச்சரித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



