அமெரிக்க தாக்குதலில் ஈரான் தலைவர் கமேனி உயிரிழப்பு!
- Muthu Kumar
- 01 Mar, 2026
அமெரிக்கத் தாக்குதலில் ஈரான் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து அந்நாடு 40 நாட்கள் துக்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டு உள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கமேனியின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகங்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நேற்று தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதலில் கமேனியின் இருப்பிடம் முற்றிலும் தரைமட்டமானது. இதில், கமேனி கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில், வரலாற்றில் மிக மோசமான தீய மனிதர்களில் ஒருவரான கமேனி உயிரிழந்ததாக அறிவித்துள்ளார்.
தங்களது உளவு மற்றும் மிகவும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளை கமேனியால் எதிர்கொள்ள முடியாமல் போனதாகவும், இஸ்ரேலுடன் இணைந்து கமேனி மற்றும் அவரது கூட்டாளிகளை கொன்றதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், நாட்டை தங்களுக்கானதாக மாற்றிக் கொள்வதற்கு ஈரானிய மக்களுக்கு கிடைத்த ஒற்றை வாய்ப்பு இது எனவும், கமேனி மறைவுக்கு பின்னர் ஈரானிய பாதுகாப்பு படைகள் சண்டையிட விரும்பவில்லை என்பதை அறிந்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரான் மீது ஒரு வாரத்திற்கு இடைவிடாது துல்லிய தாக்குதல் இருக்கும் என்றும் உலக நாடுகளில் அமைதி நிலவும் வரை தாக்குதல் தொடரும் என்றும் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அளித்த தகவலின்படியே கமேனி உயிரிழந்தது பற்றி டிம்பர் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதை அந்நாட்டு தொலைக்காட்சி உறுதி செய்தது. மேலும் கமேனியின் மகள், மருமகன், பேரக்குழந்தை கொல்லப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. கமேனி கொல்லப்பட்டதற்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



