விபத்துக்குள்ளான போலீஸ் ஹெலிகாப்டர் இரண்டு நாட்களுக்குள் மீட்கப்படலாம்!
- Muthu Kumar
- 14 Jul, 2025
ஜொகூர், கேலாங் பாத்தாவில் சுங்கை பூலாய் ஆற்றில் வியாழக்கிழமை விழுந்து நொறுங்கிய போலீஸ் ஹெலிகாப்டர் இன்றோ அல்லது நாளையோ மீட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடற்படையினரும் மலேசியக் கடலியல் அமலாக்க முகமையினரும் அப்பணியை மேற்கொள்வார்கள் என்று உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத்துறையின் விமான நடவடிக்கைகள் படைப் பிரிவின் ஆணையர் டத்தோ நூர் ஷாம் முகமது ஷானி தெரிவித்தார்.
நொறுங்கிய நிலையில் ஹெலிகாப்டரை விரைவில் அங்கிருந்து மீட்க வேண்டியுள்ளது. அதன் பிறகுதான், அச்சம்பவம் பற்றி விமான விபத்துப் புலனாய்வுத்துறையினால் (ஏஏஐபி) விசாரணை நடத்த முடியும் என்று அவர் விவரித்தார்.
மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கூட்டாக கலந்து கொண்ட பல்முனை அணுவியல் பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், போலீஸ்படைக்குச் சொந்தமான ஏஎஸ்355என் எனும் அந்த ஹெலிகாப்டர் மலேசியக் கடலியல் படகுத்துறை அருகே விழுந்தது. வியாழக்கிழமையன்று காலை 9.51மணிக்கு தஞ்சோங் குப்பாங் போலீஸ் நிலையத்திலிருந்து ஒரு விமானி உட்பட ஐவருடன் அது புறப்பட்டுச் சென்ற போது அந்த விபத்து நிலவியது. நல்வாய்ப்பாக, அதில் இருந்த ஐவரும் காயங்களுடன் உயிர்த் தப்பினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



