ஹாங்காங்கில் 3 கிலோ கஞ்சாவுடன் மலேசிய இளைஞர் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 16-

ஹாங்காங்கில் மூன்று கிலோ கஞ்சா மொட்டுகளுடன் கைது செய்யப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த 19 வயது இளைஞர், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலால் கூரியராகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சரவாக்கைச் சேர்ந்த அந்த இளைஞர், கடந்த ஜூலை 9ஆம் தேதி ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தபோது அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது உடைமைகளைச் சோதனையிட்ட அதிகாரிகள், மூன்று கிலோ கஞ்சா மொட்டுகளைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்தனர்.

இதுதொடர்பாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ உசேன் ஓமார் கான் கூறுகையில், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மலேசியாவில் முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றார். அவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் பணியமர்த்தப்பட்டு, ஹாங்காங்கிற்குப் பொருளைக் கொண்டு செல்ல அனுப்பப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இளைஞரைப் பணியமர்த்தியதாகச் சந்தேகிக்கப்படும் கும்பலின் அடையாளம் மற்றும் கஞ்சாவை அவரிடம் ஒப்படைத்தவர்கள் குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. ஹாங்காங் அதிகாரிகளிடமிருந்து கைது தொடர்பான உறுதிப்படுத்தல் பெறப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிய மலேசிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *