போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருந்த பிரான்ஸ் நாட்டு பிரஜை விடுதலை
- Shan Siva
- 03 Feb, 2026
அலோர் ஸ்டார், பிப் 3:
மலேசியாவில் போதைப்பொருள் தொடர்பான 8 குற்றச்சாட்டுகள் காரணமாக மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த
பிரான்ஸ் நாட்டு பிரஜையான 34 வயது டோம்
பெலிக்ஸ் இன்று நீதிமன்றத்தால் முழுமையாக விடுதலை செய்யப்பட்டார். சுமார் இரண்டரை ஆண்டுகள் காவலில்
இருந்த பின்னர் அவர் விடுதலை பெற்றுள்ளார்.
வடக்கு மலேசியாவின் அலோர் ஸ்டார் நகரில் உள்ள உயர்நீதிமன்றம்,
இந்த வழக்கில் டோம் பெலிக்ஸுக்கு போதைப்பொருட்கள் மீது கட்டுப்பாடு, பாதுகாப்பு அல்லது உடைமை இருந்ததை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதாகத்
தீர்ப்பளித்தது.
இதனால், குற்றச்சாட்டுக்குள்ளான நபர் விடுதலை
செய்யப்பட்டு, அனைத்து குற்றங்களிலிருந்தும் வழக்குத் தள்ளுபடி செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஈவானி பாரிஸிதா முகம்மது தீர்ப்பளித்தார்.
தீர்ப்புக்குப் பிறகு, அவரது
பெற்றோர் ஜான்
லூக் மற்றும் சில்வி பெலிக்ஸ் ஒருவரையொருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினர்.
2023 ஆம் ஆண்டு, தாம்
வசித்த வீட்டின் பொது
பகுதியில் 1.86 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதைத்
தொடர்ந்து, டோம் பெலிக்ஸும் அவரது மலேசிய வணிக
கூட்டாளரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், டோம்
பெலிக்ஸிடம் 11.7 கிராம் கஞ்சா இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து குற்றச்சாட்டுகளையும் டோம் பெலிக்ஸ் மறுத்திருந்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால், அவருக்கு மரண தண்டனை அல்லது மொத்தமாக 104
ஆண்டுகள் சிறை, 54பிரம்படி, மேலும் 27,000 யூரோ
(அமெரிக்க டாலர் 31,000) அபராதம்
விதிக்கப்படலாம் என அவரது தாய் முன்பு AFP
செய்தி
நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.
மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வைத்திருத்தல்
கடுமையான குற்றங்களாகக் கருதப்படுகின்றன. அதிக அளவு போதைப்பொருள் சம்பந்தப்பட்ட
வழக்குகளில் மரண தண்டனைக்கு சட்டம் அனுமதி அளித்தாலும், தற்போது
அது கட்டாயமானதல்ல. மேலும், 2018 முதல்
எந்த மரண தண்டனையும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



