உத்தரவை மீறியதற்காக அக்மால் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் சிம் கோரிக்கை!
- Muthu Kumar
- 16 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 16-
பினாங்கின் கப்பளா பத்தாசில் பொது ஒழுங்கிற்கு இடையூறு செய்ததாகக் கூறப்பட்டது மற்றும் போலீசாரின் உத்தரவைப் பின்பற்ற மறுத்ததற்காக, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பினாங்கு மாநில ஜசெக தலைவர் ஸ்டீவன் சிம் போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கப்பளா பத்தாஸ் பகுதியில் யாரும் ஒன்றுகூடக் கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி இருந்ததாக, மனித வளத்துறை அமைச்சரும் ஜசெக துணைத் தலைமைச் செயலாளருமான சிம் தெரிவித்தார்.
போலீசாரின் உத்தரவை ஜசெக பின்பற்றியதாகவும் இம்மாத இறுதியில் கொண்டாடப்பட விருக்கும் தேசிய தினத்தை முன்னிட்டு கப்பளா பத்தாஸ் பகுதியில் உள்ள மக்களுக்கு தேசியக் கொடிகளை வழங்குவதற்காக மட்டுமே ஜசெக தனது உள்ளூர் பிரதிநிதிகளை அங்கு அனுப்பி வைத்திருந்ததாகவும் சிம் கூறினார்.
"ஆனால், அங்கு நடந்த ஆட்சேபக் கூட்டம் போலீசாரின் உத்தரவை மீறி நடத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிவதோடு சட்டமும் மீறப்பட்டுள்ளது. அக்கூட்டம் பொது அமைதிக்கு மிரட்டல் விடுக்கும் ஒரு தூண்டுதல் செயலாகும்" என்று நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் சிம் குறிப்பிட்டார்.
அச்சம்பவம் தொடர்பில் பினாங்கு மாநில ஜசெக, போலீஸ் புகார் ஒன்றைச் செய்யும் என்றும் அதுபோன்ற செயல் சகித்துக்
கொள்ளப்படாது என்ற ஒரு தெளிவான தகவலை வெளிப்படுத்துமாறும் அதிகாரத் தரப்பினரை அவர் வலியுறுத்தினார்.
கப்பளா பத்தாஸில் உள்ள ஒரு கடையின் முன்புறத்தில் அக்மாலும் அம்னோ இளைஞர் பிரிவைச் சேர்ந்த சிலரும் கூடியிருந்ததாக,
நேற்றுமுன்தினம் மாலையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட அக்கடை உரிமையாளரின் கடையின் முன் அவர்கள் கூடியிருந்ததாகவும் கூறப்பட்டது.
தமது அத்தகைய செயலுக்காக அக்கடை உரிமையாளர் மீது நேற்றுமுன்தினம் வியாழக்கிழமைக்குள் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படவில்லையென்றால், தேசியக் கொடியை எப்படி பறக்க விடுவது என்பது குறித்து அக்கடை உரிமையாளருக்குத் தாம் "பாடம் புகட்டப் போவதாக"அக்மால் இதற்கு முன்னர் மிரட்டல் விடுத்திருந்தார்.
இதன் தொடர்பில், அக்கடை உரிமையாளர் மன்னிப்புக் கேட்டிருப்பதோடு உண்மைச் சம்பவத்தை விளக்கி இருப்பதால், சம்பந்தப்பட்ட பகுதியில் யாரும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.இந்நிலையில், “தேசியக் கொடி சோதனை"என்ற பெயரில் அக்மால் கூட்டிய கூட்டத்தில் சிக்கித் தவிப்பதை தவிர்ப்பதற்காக, கப்பளா பத்தாஸில் உள்ள கடைகள் அனைத்தும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முழுமையாக மூ டப்பட்டன.
இங்குள்ள பல கடைகளின் உரிமையாளர்கள் கடைகளைத் திறக்கவில்லை. காலையில் வழக்கம்போல் தங்களின் கடைகளைத் திறந்தவர்கள் பிற்பகல் 3 மணிக்குள் தங்களின் கடைகளை அடைத்து விட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



