சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் முழு திருப்தி-ஃபாமி ஃபட்சில்!
- Muthu Kumar
- 01 Sep, 2025
புத்ராஜெயா, செப். 1-
புத்ராஜெயா சதுக்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாட்டப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழு திருப்தி அடைந்துள்ளார்.
மாட்சிமை தங்கிய மலேசியப் பேரரசர் இப்ராஹிம் மற்றும் மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா ஸாரித் ஃசோபியா ஆகியோர் அக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விடைபெற்றவுடன், அணிவகுப்பில் பங்கேற்றவர்களிடமும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் சிலரிடமும் அன்வார் அளவளாவினார்.
இக்கொண்டாட்டத்தை வெற்றி பெறச் செய்வதில் பங்களித்த அனைவருக்கும் தாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கூறினார்."மலேசிய வரலாற்றிலே இக்கொண்டாட்டத்தை ஓர் இனிய தருணமாக நான் நினைக்கும் அதேவேளையில், இதில் கலந்து கொண்ட சிறு பிள்ளைகளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நன்றாக கல்வி கற்றுக் கொள்ளுங்கள் என்று அன்வார் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
“மலேசியா மடானி; அரவணைக்கப்படும் மக்கள்"என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்ட இவ்வாண்டு தேசிய தின விழாவில், துணைப் பிரதமர்களான டத்தோ ஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் ஆகியோருடன், தொடர்பு துறை அமைச்சரும் 2025ஆம் ஆண்டு தேசிய தினம் மற்றும் மலேசிய தினசெயற்குழு தலைவருமான டத்தோ ஃபாமி ஃபட்சிலும் கலந்து கொண்டார்.
இதனிடையே, அனைத்து வேறுபாடுகளையும் களைந்து, மலேசியர்கள் மத்தியில் ஒற்றுமையை தொடர்ந்து வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை, 2025ஆம் ஆண்டு தேசியதினக் கொண்டாட்டம் உணர்த்தியிருப்பதாக, அமாட் ஸாஹிட் தெரிவித்தார்."அனைத்து மலேசியர்களிடையேயும் ஒற்றுமை மேலோங்கியுள்ளது என்றும் நமது வேறுபாடுகளைக் களைந்து ஒருமித்த உணர்வில் கொண்டாடுவது மிகவும் நல்லது என்றும் நான் கருதுகிறேன் என்று அவர் கூறினார்.
தேசிய தின அணிவகுப்பிக்கான ஆதரவு மற்றும் இன்றைய கொண்டாட்டங்களின் மூலம் காணப்பட்ட மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய மற்றொரு துணைப் பிரதமரான ஃபாடில்லா யூசோஃப்பும், அதே உணர்வை வெளிப்படுத்தினார். "நமது மன உறுதியுடன் கூடிய சிறந்த செயல்திறனுக்கான அடையாளமாக இது அமைந்துள்ளது. அனைத்து மக்களின் நல்வாழ்விற்காக மலேசியர்களின் ஒற்றுமையை உறுதி செய்ய நாம் ஒன்றுபடுவதுதான் இதில் முக்கிய
அம்சமாகும்" என்று ஃபாடில்லா தெரிவித்தார்.
இந்நிலையில், இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக, புத்ராஜெயா கழகத்தின் புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி ஃபாமி தெரிவித்தார். கடந்த ஆண்டுக் கொண்டாட்டத்தோடு ஒப்பிடும்போது இவ்வாண்டுக் கொண்டாட்டம் மேலும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இவ்வாண்டு அணிவகுப்புகளிலும் ஊர்வலங்களிலும் மொத்தம் 14.062 பேர் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



