நாட்டை அழிக்கும் இன- மதவாத அரசியலுக்கு பிரதமர் அன்வார் இடங்கொடார்!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

ஈப்போ, ஆக. 21-

மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு மித்ரா வழி மலேசிய இந்திய சமூகத்திற்கு மடானி ஒற்றுமை அரசாங்கம் என்ன செய்துள்ளது என்ற முழு புள்ளி விவரத்தை நேற்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், இந்திய சமூக நல விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுச் செயற்குழுத் தலைவருமான சிவநேசன் கூறினார்.

கடந்த 68 ஆண்டு கால வரலாற்றில், நாடு பார்க்காத பல நல்ல திட்டங்களை, பிரதமர் அன்வார் மக்களுக்காக நிறைவேற்றியுள்ளார்.
தொடர்ந்து நிறைவேற்றியும் வருகின்றார். இந்திய சமூகமும் ஏழ்மையிலிருந்து மீண்டு எல்லோரும் தன்னிறைவு பெற்றவர்களாக பாதுகாக்கும் பணியை செய்யும் ஓர் அதிகாரி போன்ற மனநிலையில், அமைச்சரவைக்கு தலைமை தாங்கி வருகிறார்.

தமது பதவிக்காக ஏங்குவது. எதிர்க்கட்சியிடம் மண்டியிடுவது போன்ற இழிநிலை பிரதமரிடம் கிடையாது என்றார். பெரிக்காத்தான் கூட்டணி அரசாங்கம் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் கடந்த 36 மாதங்கள் இருந்தபோது என்ன நடந்தது? அன்வார் தலைமை ஏற்ற பிறகு என்ன நடந்தது? என்பதை மக்கள் வியந்து பார்க்கிறார்கள்.

அவற்றில் முக்கியமாக 32 அமைச்சர்களுக்கு மாற்றாக 31 அமைச்சர்கள், துணையமைச்சர்கள் 38 பேருக்கு மாற்றாக 29 பேர். அரசியலில் 186 பேர் இருந்துள்ள நிலையில், தற்போது 95 பேர் நியமிக்கப்பட்டனர்.

ஒற்றுமை அரசாங்கத்தில், அமைச்சர்களின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும், அந்நிய முதலீடு என்பது 193.7 சதவீதமாக இருந்துள்ள நிலையில் மடானி ஆட்சியில் அது 254.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. முஹிடின் தலைமையில் நாட்டின் பண வீக்கம் என்பது 4.7 சதவீதமாக இருந்துள்ள நிலையில், அன்வாரின் திறமையால், அது 1.8 சதவீதமாக சரிந்தது. வேலையின்மை அப்போது 4.6 சதவீதம். இப்போது 3.3 சதவீதமாக குறைந்துள்ளது. பட்ஜெட் ஒதுக்கீட்டில் பற்றாக்குறை அன்று 6.4 சதவீதம். இன்று 4.3 சதவீதமாக இறக்கம் கண்டது என சிவநேசன் இந்த புள்ளி விவரத்தை எடுத்துக்காட்டினார்.

அன்று பெரிக்காத்தான் கூட்டணி அரசாங்கம் என்பது தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக, இன ரீதியிலான மற்றும் மத ரீதியான அரசியலைக் கையாண்டதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தீங்கு விளைவித்தது. இது சமூக ஒற்றுமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் அன்வார் நாட்டிற்குத் தலைமையேற்று இன்னும் 36 மாதங்கள் ஆகவில்லை. ஆனால், நாட்டின் வளர்ச்சி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில், சமூகத்தின் பெயரில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களுக்கு பதவிகள் கொடுக்கவில்லை என்னும் ஆதங்கத்தில், எதிரணியுடன் கூட்டு சேர்வதில் பிரச்சினை இருக்காது என்கின்றனர். அப்படியே அவர்கள் அணி தாவினாலும் அதில் ஒற்றுமை அரசுக்கு பாதிப்பு கிடையாது. போனால் போகட்டும். இதனால், அக்கட்சி மேலும் பலவீனம் அடையும். அன்று நாங்கள் பாஸ் கூட்டணியின் அரசியலை அறிந்திருக்காமல் கூட்டு சேர்ந்தோம். ஆனால், இன ரீதியான மற்றும் மத ரீதியான மக்கள் மத்தியில் பிளவுகளை நிர்வகிப்பதில் அது எப்படிப்பட்ட அரசியல்

கூட்டணி என்பது தெரிந்தே ஒரு சாரார் பிடிவாதமாக இருக்கின்றனர். யார் எங்கு சென்று சரணடைந்தாலும் அது அவர்கள் விருப்பம். அதன்படி, நம்பிக்கைக் கூட்டணிக்கு மேலும் பலத்துடன் திகழ வரும் 16ஆவது பொதுத் தேர்தலில், இன்னும் அதிகமான தொகுதிகளை வெற்றித் தொகுதிகளாக மக்கள் கொடுப்பார்கள். அதனால், அன்வாரே மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்பதை பார்க்கத்தான் போகின்றனர் என சிவநேசன் கருத்துரைத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *