இதர 3 கார்களை மோதுவதற்கு முன்னர் லோரியிலிருந்து வெளியே குதித்ததை ஓட்டுநர் ஒப்புக் கொண்டார்!
- Muthu Kumar
- 29 Sep, 2025
காஜாங், செப். 29-
சிலாங்கூரின் காஜாங்கில் உள்ள புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நிகழ்ந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்த ஒரு லோரி ஓட்டுநர், இதர வாகனங்களை லோரி மோதுவதற்கு முன்னர் அதிலிருந்து தாம் கீழே குதித்து விட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.
லோரியின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறினால்தான் தாம் அவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.அந்த மோசமான விபத்து குறித்து கேள்விகள் கேட்கப் பட்டபோது, 42 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர் தமது அத்தகைய செயலை ஒப்புக் கொண்டதாக, காஜாங் போலீஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யோசோப் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
விசாரணைக்காக தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த லோரி ஓட்டுநர் இரண்டு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"அந்த லோரி ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வேளையில், அந்த லோரியின் உரிமையாளர் உட்பட இதர ஐவரிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருக்கின்றனர். அந்தலோரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது" என்று நஸ்ரோன் கூறினார்.
"பதிவுகளின்படி, அந்த லோரி மீது கடந்த ஏப்ரலில் வாகன பராமரிப்பு சோதனை செய்யப்பட்டிருக்கிறது. பிரேக் செயலிழப்பினால் அல்லது வேறு பிரச்சினைகளினால் அந்த விபத்து நிகழ்ந்ததா என்பதை தீர்மானிக்க ஒரு விசாரணையும் தற்போது நடத்தப்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
அந்த லோரி ஓட்டுநர் நேற்று முன்தினமே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் தொடர்பில் அவருக்கு எதிராக மூன்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகவும் கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரைக்கும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக நான்கு சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் நஸ்ரோன் கூறினார்.
அந்த நபரின் சிறுநீர் பரிசோதனையின் முடிவில் அவர் பொருள் அல்லது மது அருந்தி இருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது என்று கூறிய நஸ்ரோன், மரணம் விளைவிக்கும் அளவுக்கு கவனக் குறைவாக அல்லது மிகவும் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதற்காக அவ்விபத்து விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
சனிக்கிழமை காலை 10.30 முதல் 11.00 மணிக்கிடையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அவ்விபத்தில், இரண்டு எஸ்யூவி கார்களையும் ஒரு காரையும் அந்த லோரி வேகமாக வந்து மோதித் தள்ளிய காட்சி அடங்கிய ஒரு காணொளி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.அந்த மோசமான சாலை விபத்தில், ஒரு வயதே நிரம்பிய ஒரு குழந்தை. ஒரு எஸ்யூவி காரின் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



