போர்க் களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு அமெரிக்க ராணுவம் கண்டுபிடித்த 'அதிநவீன' தீர்வு!
- Muthu Kumar
- 21 Nov, 2025
போர்க்களத்தில் குண்டடிபட்டோ அல்லது தீக்காயம் அடைந்தோ உயிருக்கு போராடும் வீரர்களை காப்பாற்ற, அமெரிக்க ராணுவம் அறிவியல் புனைகதை போன்ற தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்துள்ளது.அதுதான் '3D பயோ-பிரிண்டிங்.காகிதத்தை பிரிண்ட் செய்வது போல, இனி மனிதத் தோலையும் பிரிண்ட் செய்ய முடியும்.
சாதாரண பிரிண்டரில் 'மை' ஊற்றுவது போல, இந்த அதிநவீன 3D பிரிண்டரில் உயிருள்ள செல்கள், புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.இதைக் கொண்டு மனிதத் திசுக்கள் அச்சு அசலாக உருவாக்கப்படுகின்றன. இந்தச் சாதனையை நிகழ்த்த, அமெரிக்க ராணுவத்தின் போர் திறன் மேம்பாட்டுப் பிரிவு ஹவாய் பல்கலை. உடன் கைகோர்த்துள்ளது. இதற்கான கூட்டுறவு ஆராய்ச்சி ஒப்பந்தத்தின் கீழ், ஹவாய் பல்கலை. பேராசிரியர் டாக்டர் ஜேசன்பார்ன்ஹில், ராணுவ ஆராய்ச்சியாளர் பிரிசில்லா லீ ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், போர்க்கள மருத்துவம் அடியோடு மாறிவிடும். வெடிகுண்டு அல்லது தீ விபத்துகளில் தோல் சிதைந்த வீரர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கலாம். விஷ வாயுக்கள் மற்றும் இரசாயனத் தாக்குதல்களால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்யலாம். மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியாத் தொற்றுகளை சமாளிக்க இது உதவும். 'ஆர்கன்-ஆன்-எ-சிப்' (Organ-on-a-chip) முறையில் செயற்கை உறுப்பு மாதிரிகளை உருவாக்கி, புதிய மருந்துகளைச் சோதித்துப் பார்க்கவும் இது பயன்படும்.
இது வெறும் ஆரம்பம்தான். இந்தத் தொழில்நுட்பம் முழு வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு பெரிய புரட்சியே வெடிக்கும். நோயாளியின் உடலில் இருந்தே செல்களை எடுத்து, அவருக்குத் தேவையான இதயம் போன்ற உறுப்புகளை முழுமையாக ஆய்வகத்திலேயே உருவாக்கிவிட முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் இது ஒரு புதிய சகாப்தத்தையே உருவாக்கப்போகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



