ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது “பாதுகாப்பு வளையத்திற்கு” வெளியே ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி!
- Muthu Kumar
- 23 Oct, 2025
கோலாலம்பூர், அக். 23
வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு கோலாலம்பூரில் நடைபெற விருக்கும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட விரும்புவோருக்கு, குறிப்பிட்ட இடங்களில் போடப்பட்டுள்ள "பாதுகாப்பு வளையத்திற்கு" வெளியே அவ்வாறு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
இம்மாநாட்டின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் 10,400 போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் இந்த நோக்கத்திற்காக பரீட்சார்த்த சோதனை நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டு இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். "மக்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் நிலவுவதையும் தீவிரமாக பங்கேற்றிருப்பதையும் நாங்கள் அங்கீகரித்தாலும், அவர்கள் சுதந்திரமாக குரல் எழுப்பலாம் என்பதோடு ஆர்ப்பாட்டம் அல்லது ஒன்று கூடவும் சுதந்திரம் இருக்கிறது"
"எனினும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்போருடன் ஒத்துழைக்குமாறு அவர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதில் குறிப்பாக வெளிநாட்டு விருந்தினர்கள் கூடும் இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடந்த வேண்டாம்" என்று,நாடாளுமன்ற தகவல் சாதன மையத்தில் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது சைஃபுடின் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு வளையத்திற்குள். கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் உள்ள ஆசியான் உச்சநிலை மாநாட்டு இடமும் விருந்தினர்கள் தங்கி இருக்கும் 20க்கும் மேற்பட்ட ஓட்டல்களும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார். மிரட்டல்களின் ஆபத்தை கையாள்வது அவர், நாட்டுத் மற்றும் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக அறியப்படுவோருக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்."சம்பந்தப்பட்ட தலைவர்களின் நாடுகளின் பின்னணி மற்றும் அந்நாடுகளின் நடப்பு அரசியல் விவகாரங்களைப் பொறுத்து பாதுகாப்பு வழங்கப்படும்" என்று சைஃபுடின் கூறினார்.
இம்மாநாட்டில் 23 அரசாங்கத் தலைவர்கள் கலந்து கொள்ள விருப்பதாகவும் அவர்களில் சிலர் சுபாங் விமான நிலையம் மற்றும் சிலர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கேஎல்ஐஏ) வழியாக வந்தடைய விருப்பதாகவும் அவர் தெரிவித்தார்."அவர்கள் பயணம் செய்ய விருக்கும் சாலைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர்கள் பயணம் செய்யும்போது அச்சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும்" என்றும் சைஃபுடின் கூறினார்.
இம்மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் உலகத் தலைவர்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனப் பிரதமர் லி ஜியாங் மற்றும் ரஷ்ய துணைப் பிரதமர் ஆகியோரும் அடங்குவர்.இந்நிலையில், டிரம்பின் வருகையை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் உள்ள அம்பாங் பார்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்த, சில பொது அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.
இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கின்ற காரணத்தினால், ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு டிரம்புக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பை ரத்து செய்யுமாறு, பல பாலஸ்தீன ஆதரவு இயக்கவாதிகளும் கும்பல்களும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வலியுறுத்தியுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



