பணம் வந்த வழியை நிரூபியுங்கள் இல்லையேல் அப்பணத்தை அரசிடம் ஒப்பிடைத்து விடுங்கள்!
- Muthu Kumar
- 01 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 1 -
கோடிக் கணக்கான பணம், சட்டப்பூர்வமாக வந்ததா அல்லது சட்டவிரோதமாக வந்ததா என்பதை தெளிவாக நிரூபிக்குமாறு, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் இரண்டு புதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்களிடம் இருக்கும் அப்பணம் முறையான வழியில் வந்தது என்பதை நிரூபிக்க, டான் ஸ்ரீ மொக்ஸானி மகாதீரும் மிர்ஸான் மகாதீரும் நிரூபிக்கத் தவறினால், அவர்கள் இருவரும் அப்பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இவர்கள் இருவரும் அம்பலப்படுத்தி இருக்கும் தங்களின் சொத்து விவரங்கள் வழக்கத்திற்கு மாறானவையாக இருப்பதால், அதாவது கோடிக்கணக்கான பணம் தொடர்பில் எழுந்துள்ள கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
சில தினங்களுக்கு முன்னர் அலுவல் காரணமாக இந்தோனேசியா சென்றிருந்தபோது, அந்நாட்டு செய்தியாளர் நஜ்வா ஷிஹாப்புடன் நடந்த ஒரு நேர்காணலின்போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது. நிதி அமைச்சருமான அன்வார் இதனைத் தெரிவித்திருந்தார்.''யார் மீதும் நான் வேண்டுமென்றே குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. மாறாக, ஒரு சம்பவத்தை விசாரணை செய்யும் பொறுப்பை மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்திடமே (எம்ஏசிசி) நான் விட்டு விடுகிறேன்.
"ஆனால், ஒருவர் தமக்குச் செந்தமானது என்று 12 கோடி வெள்ளி மற்றும் மற்றொருவர் 400 கோடி வெள்ளி சொத்தை அவர்களாகவே அறிவித்தால், அப்பணம் முறையான வழியில் அதாவது சட்டப்பூர்வமாக வந்தது என்பதை நிரூபித்தால் அவை அவர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கும்."மாறாக, அவ்வாறு நிரூபிக்க அவர்கள் தவறினால் அப்பணத்தை அவர்கள் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும்" என்று அன்வார் வலியுறுத்தினார்.தமது சொத்தின் மதிப்பு சுமார் 100 கோடி வெள்ளி என்று மொக்ஸானியும் தமது சொத்தின் மதிப்பு 24 கோடியே 62 லட்சம் வெள்ளி என்று மிர்ஸானும் எம்ஏசிசியிடம் அறிவித்திருப்பதாக பதிவுகள் கூறுகின்றன.
வழக்கத்திற்கு மாறான வழியில் சொத்துகளை சேர்த்திருப்பதாகக் கூறப்படும் தனிநபர்களை நாட்டின் எதிர்க்கட்சியினர் தற்காத்து வருவது வியப்பான ஒன்று என்று அன்வார் வருணித்துள்ளார். "இதுபோன்ற விவகாரங்களை எதிர்க்கட்சியினர் தற்காத்து பேசி வருவது வியப்பாக இருக்கிறது. உண்மையில் இவர்கள்தான் லஞ்ச ஊழலை எதிர்ப்பதில் தீர்க்கமாக இருக்க வேண்டும்."ஆனால், அதற்கு மாறாக அவர்கள், டாக்டர் மகாதீர் “சுமந்து கொண்டிருப்பவர்கள்" உட்பட லஞ்ச ஊழலுடன் தொடர்புடைய தனிநபர்களை எதிர்க்கட்சியினர் தற்காத்து வருவது விசித்திரமாக இருக்கிறது.
"பிரதமர் அல்லது அமைச்சர்களின் பிள்ளைகள் கோடிக் கணக்கில் பணத்தை கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தகைய கலாச்சாரத்தை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.'சீர்திருத்தம் என்பது ஏட்டுச் சுரைக்காயாகவோ அல்லது வெறுமனே விதிமுறைகளாகவோ மட்டும் இருந்துவிடக் கூடாது. சொன்னதை நிறைவேற்றுவதுதான் சீர்திருத்தத்தின் உண்மையான அர்த்தமாகும்" என்று அன்வார் தீர்க்கமாகக் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



