பாஸ் இளைஞர் பேரவையில் மஇகா கலந்துகொள்ளாதது பயத்தினால் அல்ல வேலைப் பளுவே காரணம்!
- Muthu Kumar
- 15 Sep, 2025
கோலாலம்பூர், செப். 15-
பாஸ் கட்சியின் இளைஞர் பேரவையில் கலந்து கொள்ளுமாறு அப்பேரவை நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்னர்தான் அதனிடமிருந்து அழைப்பு வந்ததால், அந்த குறுகிய காலகட்டத்தில் மஇகா இளைஞர் பிரிவினால் தனது பிரதிநிதியை அதில் கலந்து கொள்ள அனுப்ப முடியாமல் போனதாக, அப்பிரிவின் தலைவர் கே. அரவிந்த் விளக்கம் தெரிவித்துள்ளார்.
"பேரவை நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்னர்தான் அழைப்புக் கிடைத்தது என்பதை தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன். ஆதலால், தனது பிரதிநிதியை அனுப்பி வைக்க மிகக் குறுகிய காலஅவகாசம் மட்டுமே இருந்தது.
"மாறாக, அப்பேரவையில் கலந்து கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டது அல்லது பயத்தினால் அல்ல. ஆனால், போதுமான காலஅவகாசம் இல்லாமல் போய்விட்டது. அனைத்து (மஇகா) இளைஞர் பிரிவு தலைவர்களுக்கும் நேரம் கிடைக்காமல் போய்விட்டது” என்று அரவிந்த் நேற்று தெரிவித்தார்.எந்த அழைப்பும் விடுக்கப்படும்போது அதற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருப்பது மலேசிய மக்களுக்கு வழக்கமான ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
“எழுபது ஆண்டுகளுக்கும் மேல் அரசியல் வரலாற்றைக் கொண்டிருக்கும் ஒரு கட்சி எனும் முறையில் மஇகா, எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரு சிறந்த முன்னுதாரணத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்" என்று அவர் கூறினார்.கெடா, அலோர்ஸ்டாரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பாஸ் கட்சியின் இளைஞர் பேரவையில் கலந்து கொள்ளுமாறு மஇகா இளைஞர் பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் அஃப்னான் ஹமிமி தைய்ப் உறுதிப்படுத்தி இருந்தார்.
அண்மையில் சிலாங்கூர், ஷா ஆலமில் நடந்த பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு பேரவையில் கலந்து கொண்டபோது,பாஸ் கட்சியின் இளைஞர் பேரவையில் கலந்து கொள்ளுமாறு மஇகா இளைஞர் பிரிவு துணைத் தலைவர் கே. கேசவனுக்கு நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம். அவசியம் வருவதாக கேசவனும் வாக்குறுதி அளித்திருந்தார்.
"ஆனால், (எங்களின் பேரவையில்) அவரை நாங்கள் பார்க்கவில்லை. இதில் கலந்து கொள்வதிலிருந்து அன்றைய தினம் காலையில் அவர் தடுக்கப்பட்டிருக்கலாம். கலந்து கொள்ள வேண்டாம் என்று அவருக்கு சிலர் அறிவுறுத்தியும் இருக்கலாம்" என்று அஃப்னான் தெரிவித்தார். "எங்களின் அழைப்பு மஇகாவுக்கு மட்டும் விடுக்கப்பட்டது. மஇகாவை மட்டுமே அழைத்தோம். அம்னோவையும் மசீசவையும் நாங்கள் அழைக்கவில்லை" என்று அவர் கூறினார்.
மஇகா சார்பாக கேசவன் பெர்சத்து இளைஞர் பேரவையில் கலந்து கொண்டதற்காக, தேசிய முன்னணி தலைவர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மஇகாவிடமிருந்து விளக்கம் கோரும் கடிதத்தைக் கோரியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



