டாய்மின் வெ.300 கோடி சொத்துகளை எம்ஏசிசி கைப்பற்றியது!
- Muthu Kumar
- 12 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 12-
காலஞ்சென்ற முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஸைனுடின், அவரின் துணைவியார் தோ புவான் நயீமா காலிட் அவர்களின் குடும்பத்தினர். நெருங்கிய சகாக்கள் ஆகியோருடன் தொடர்புடைய முந்நூறு கோடி வெள்ளிக்கும் மேற்பட்ட சொத்துகளை மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைப்பற்றியுள்ளது.
விலை மதிப்புவாய்ந்த அச்சொத்துகள் பதினோரு நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன. எம்ஏசிசியின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவினரால் அவை அடையாளம் காணப்பட்டன என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் எம்ஏசிசி குறிப்பிட்டது.
பிரிட்டன், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலண்ட்ஸ், கெய்மன் ஜலண்ட்ஸ், ஜெர்சி, இத்தாலி, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகளிலும் அச்சொத்துகள் உள்ளன.
பிரிட்டனின் தேசிய குற்றவியல் முகமை, அனைத்துலக ஊழல் ஒழிப்பு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு அப்புலன்விசாரணை நடத்தப்பட்டது.
பிரிட்டனில் எழுபத்தைந்து கோடியே எண்பது லட்சம் வெள்ளி மதிப்புடைய ஏழு சொத்துகளை விற்பனை முடக்கம் செய்வதற்கான உத்தரவொன்றை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியிட்டிருந்தது.மேலும், ஜெர்சி மற்றும் சிங்கப்பூரில் உள்ள மேலும் பல சொத்துகளை விற்பதற்குத் தடை விதிக்கக் கோரும் விண்ணப்பங்களையும் நீதிமன்றத்திடம் எம்ஏசிசி சமர்ப்பித்துள்ளது.
ஜெர்சியில் நான்கு வங்கிக் கணக்குகளில் உள்ள 115 கோடி வெள்ளி மற்றும் சிங்கையில் பன்னிரண்டு கணக்குகளில் உள்ள 54 கோடி வெள்ளியும் அச்சொத்துகளில் அடங்கும். நயீமா, அவரின் மகன் முகமது அமிர் ஸைனுடின் டாய்ம் ஆகியோரிடமிருந்து ஜூன் 14ஆம் தேதியன்று எம்ஏசிசி வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.
சொத்து விவரங்களை அறிவிக்கத் தவறியதன் தொடர்பில் அவ்விசாரணை நடத்தப்பட்டது. டாய்மின் இரண்டாவது மகனான முகமது அமின் ஸைனுடின் டாய்மிடமிருந்தும் விரைவில் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.முகமது அமின் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார்.
கோலாலம்பூரின் மையப் பகுதியில் உள்ள இல்ஹாம் டவர் எனும் கட்டடத்தையும் எம்ஏசிசி கைப்பற்றியுள்ளது. ஐம்பத்தெட்டு மாடிகள் கொண்ட அக்கட்டடம் டாய்ம் குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



