பினாங்கு பெஸ்தாவின் எதிர்காலம் என்ன? 60 ஆண்டுகால வரலாறு அஸ்தமணமாகுமா?
- Tamil Malar (Reporter)
- 12 Dec, 2025
ஜோர்ஜ்டவுன், டிச. 12-
அடுத்த ஆண்டு முதல் சுங்கை நிபோங் பகுதியில் நடைபெறும் பினாங்கு பெஸ்தா (Pesta Pulau Pinang) 6 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பிரபலமான வருடாந்திர கொண்டாட்டத்தின் எதிர்காலம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று முதலமைச்சர் சௌ கோன் யாவ் தெரிவித்தார்.
முத்தியாரா எல்.ஆர்.டி (LRT) திட்டத்திற்காக அந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால், அங்கு டிப்போ, எல்.ஆர்.டி நிலையம், சுங்கை நிபோங் பேருந்து நிலையத்தை மாற்றும் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெறும் என்று அவர் கூறினார்.
“தற்போது மாநில அரசும், தொடர்புடைய அமைப்புகளும் MRT Corp உடன் இணைந்து அந்த இடத்தின் மறு அபிவிருத்தித் திட்ட முதன்மைத் திட்டத்தை ஆய்வு செய்து வருகின்றன. இந்தத் திட்டம் இறுதி செய்யப்பட்ட பின்னரே பெஸ்தாவை மீண்டும் நடத்துவது குறித்து முடிவு எடுக்க முடியும்,” என்று சௌ கோன் யாவ் கூறினார்.
அப்படியே பெஸ்தாவை மீண்டும் நடத்தினாலும், தற்போதைய அளவில் பெரிய அளவில் நடத்த முடியாது என்றும், டிப்போ, பிற கட்டுமானங்களுக்குப் பிறகு மீதமுள்ள நிலப்பரப்பில் சிறிய அளவில் நடத்தலாமா அல்லது தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமா என்பதும் ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பினாங்கு மக்களின் அடையாளமாக விளங்கும் இந்தப் பெஸ்தா, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



