அனைத்துலக மகளிர் மாநாடு! மகளிருக்கான அங்கீகாரம்!
- THINAGAREN SANGGAREN
- 17 Mar, 2026
மார்ச் 17,
அவளின் தலைமைத்துவம் அவளின் முன்னேற்றம் எனும் கருப்பொருளில் அனைத்துலக அளவிலான மகளிர் மாநாடு சன்வேயில் உள்ள Taylor’s University Lakeside Campusஇல் சிறப்பாக நடைபெற்றது. நாடளாவிய நிலையில் 150க்கும் மேலான தொழில்முனைவோர்,பெண் தலைவர்கள், பெண்கள் நல்வாழ்வு சமூக ஆர்வலர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றதுடன் 15 திறன்மிக்க பேச்சாளர்களும் அவர்களின் சாதனைகளைப் பகிர்ந்து கொண்டநர். பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பெண்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் ஊக்கமளிக்கவும், தலைமைத்துவம் மற்றும் வளர்ச்சிக்கான புதிய பாதைகளை ஆராயவும் ஒன்றுகூடும் ஒரு துடிப்பான தளமாக இந்த உச்சி மாநாடு அமைந்தது. குறிப்பாகப் பெண்கள் வணிகத்தில், நல்வாழ்வுதனை, மீள்தன்மையுடன் சமூக ஆதரவு என பல வழிகளில் மேலோங்க வேண்டும் எனும் ஓர் ஆழமான கருத்துகளை இந்த மாநாடு வலியுறுத்தியது.
இந்த உச்சிமாநாட்டிற்குத் திருமதி கௌசல்யா தலைமை தாங்கினார், அவரது தனித்துவமான தலைமைத்துவமும், ஏற்பாட்டுக் குழுவை ஒருங்கிணைப்பதில் உண்டான அயராத அர்ப்பணிப்பும் நிகழ்வின் வெற்றியை உறுதி செய்த்து. ஹோம் பிரீனியர் அதிகாரமளிப்பு வலையமைப்பு (ஹென்ஸ்) எனும் இயக்கத் தூதர்களின் வழிக்காட்டலில், பங்கேற்பாளர்களுக்குப் பயனுள்ள அனுபவத்தை உருவாக்க, செயற்குழுவினர் அயராது உழைத்தனர். தொழில்முனைவோர் சிந்தனை போக்கு, பெண்களின் நல்வாழ்வு, உணர்ச்சி ரீதியான மீள்தன்மை, வணிகத்தில் தொழில்நுட்பம் மற்றும் AI-இன் எதிர்காலம் உள்ளிட்ட முக்கியமான கருப்பொருள்களை மையப்படுத்தி உரைகள், குழு விவாதங்கள் மற்றும் அனுபவ பகிர்வுகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
"சிந்தனைப்போக்கும் தொழில்முனைவோரும்- அவளின் ஏன் எனும் சக்தி" என்ற தலைப்பில் பேசிய பிராக்சிஸ் இம்பாக்ட் கன்சல்டன்சியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முதன்மை ஆலோசகர் சாந்தி பெரியசாமியின் உரையும், "ஆரோக்கியமும் தொழில்முனைவோரும்: பெண்ணின் ஆழ்மன பலம்" என்ற தலைப்பில் டாக்டர்.லெட்டியின் நிறுவனர் டாக்டர் திலகம் சுப்பையாவின் பகிர்வும் இந்த மாநாட்டின் சிறப்பு அமர்வுகளாக இடம்பெற்றன. மேலும், மூன்று குழு விவாதங்கள் இந்த உச்சிமாநாட்டில் நடைபெற்றன. "அவளென்றால் வணிகம்: பெண்களின் சிந்தனைப்போக்கு’ முதல் தலைப்பு. நெருக்கடிக்கு அப்பால்: வணிகத்தில் பெண்களுக்கான நல்வாழ்வை மறுவரையறை செய்தல்" இரண்டாவது தலைப்பாகவும், "AI-யும் தொழில்முனைவோரின் எதிர்காலமும்" மூன்றாவது தலைப்பாகவும் இடம்பெற்றன. இந்த விவாதங்களில், சுமித்ரா பிரகலாதன், சோனா கோஸ், பயிற்சியாளர் ரஹ்மா, கீ போ சூ, ஷீலா சந்திரன், தன்யா நம்பியார், பிரவேனா கே, வான் யூயி லோ மற்றும் மஸ்லிதா மாட் ஹசான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நல்வாழ்வு மற்றும் தனிப்பட்ட மாற்றத்தை மையமாகக் கொண்ட தனித்துவமான அமர்வுகளையும் பங்கேற்பாளர்கள் அனுபவித்தனர். இதில் டாக்டர் ஹம்சாவின் நரம்பு மண்டல மீட்டமைப்பு மற்றும் சுவாசப் பயிற்சி மற்றும் கிறிஸ்கா பினெடாவின் இசைக் குளியல் அமர்வு ஆகியவை அடங்கும். பெண் தொழில்முனைவோரை வளர்ப்பதற்கும், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கும் உருவாக்கப்பட்ட தளமான Homepreneur Empowerment Network (HENs) மூலம் இந்த உச்சிமாநாடு தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு அம்சம், மீள்தன்மை, தலைமைத்துவம் மற்றும் சமூக பங்களிப்பு எனும் பல பிரிவுகளில் தனித்து நிற்கும் பெண்களை அங்கீகரிக்கும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெண்களை அறிமுகப்படுத்துவதே.
பெண்கள் ஒருவரையொருவர் ஆதரித்து மேம்படுத்தும் ஒரு வளர்ந்து வரும் இயக்கத்தை இந்த உச்சிமாநாடு பிரதிபலிக்கிறது என்று ஹோம்பிரீனியர் எம்பவர்மென்ட் நெட்வொர்க்கின் (HENs) நிறுவனர் மற்றும் மாம்ஸ் வில்லேஜ் ஆசியா SDN Bhd இன் தலைமை நிர்வாக அதிகாரி ரோசலின் தாஸ் பகிர்ந்து கொண்டார். " அவளின் தலைமைத்துவம்; அவளின் முன்னேற்றம்’ என்பது வெறும் கருப்பொருள் அல்ல. மாறாக இது தைரியம், தலைமைத்துவம் மற்றும் ஒத்துழைப்பைத் தேர்ந்தெடுக்கும் பெண்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் தாரக மந்திரம். பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும்போது, வளர்ச்சி, மாற்றம் மற்றும் தொழில்முனைவு செழிக்கக்கூடிய சமூகங்களை உருவாக்குகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
மாம்ஸ் வில்லேஜ் ஆசியாவின் நிறுவனர் வத்சலா நாயர் மனோகரன், பாதிக்கப்படக்கூடிய பெண்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், சுதந்திரம் மற்றும் அதிகாரமளிப்பதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கும் ஆதரவளிக்கும் முன்முயற்சிகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். சமூக ஆதரவு, தொழில்முனைவோர் வாய்ப்புகள் மற்றும் முழுமையான மேம்பாட்டு முயற்சிகள் மூலம் பெண்களுக்கு - குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்க ளுக்கு - அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும் ஒரு சமூக நிறுவனமான மாம்ஸ் வில்லேஜ் ஆசியா SDN Bhd இன் பரந்த நோக்கத்தையும் இந்த உச்சிமாநாடு பிரதிபலித்தது.
2026-ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் உச்சி மாநாட்டை அர்த்தமுள்ள மற்றும் வெற்றிகரமான மைல்கல்லாக மாற்றிய அர்ப்பணிப்போடு செயல்பட்ட ஏற்பாட்டுக் குழுவை உருவாக்கிய HENs தூதர்கள், ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். வலைப்பின்னல் மற்றும் கருத்து பரிமாற்றத்தோடு இந்த உச்சிமாநாடு முடிவடைந்த நிலையில், ஒரு செய்தி நாள் முழுவதும் வலுவாக எதிரொலித்தது: பெண்கள் லட்சியத்தோடு வழிநடத்தும்போது, சமூகம் அவர்களுடன் சேர்ந்து உயரும் என்பதை இந்த மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



