கோல சிலாங்கூரில் சிறுகதை பயிற்சிப் பட்டறை!
- Muthu Kumar
- 15 Nov, 2024
கோல சிலாங்கூர், நவ.15-
கோல சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 தமிழ்ப்பள்ளிகளின் மத்தியில் "சிறுகதை ஒரு பார்வை என்னும் தலைப்பில் சிறுகதை பயிற்சிப் பட்டறை நடந்தேறியது என்று தமிழ்ப்பள்ளித் தலமையாசிரியர் கழகத்தின் தேசியத் தலைவரும், பத்தாங் பெர்சுந்தை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருமான எஸ்.எஸ்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், சிறுகதை என்றால் 5-6 பக்கங்கள் கொண்டிருக்க வேண்டும். சிறுகதை பிரியர்கள் ஒரே அமர்வில் மனம் நிறைவாகப் படித்து முடிக்கும் வகையில் கதையோட்டத்தில் அடுத்து என்ன என்ற ஆர்வம் தங்களுக்குள் கொப்பளிக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் சிறுகதையின் கருப்பொருள் அமைந்திருந்தால் அதற்கு தான் சிறுகதை என்று கூறுவர்.
ஒரு கால கட்டத்தில் நாடு தழுவிய நிலையில், சிறுகதை எழுத்தாளர்களாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும், இடைநிலைப்பள்ளி தமிழ் மொழி மற்றும் தமிழிலக்கியப் பாடம் போதித்த ஆசிரியர்கள் சிறுகதை படைப்பதில் வல்லுநர்களாக திகழ்ந்த காலம் ஒன்று இருந்துள்ளது.
அந்த நிலை இன்றில்லை என்றுதான் கூறவேண்டும். எடுத்துக் காட்டாக சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் காலம் சென்ற இளம்வழுதி, மேரித் தோட்டத்தமிழ்ப்பள்ளி ஆசிரியர் காலம் சென்ற பி.கே. சரோஜா மணியம் போன்ற அதிகமானோரை கோல சிலாங்கூர் மாவட்டத் தமிழ் மண் நமக்கு வழங்கியிருந்தது. அது தான் சிறுகதை மற்றும் கவிதைகளுக்கு பொன்னாள் என்றும் கூறப்படுகிறது.
தற்போது எழுத்தாளர்கள் எண்ணிக்கையைப் பார்வையிட்டால் மிகவும் குறைவாகவே இருக்கின்றனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றால், பள்ளிப்பருவத்தில் குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் மீண்டும் சிறுகதை பயிற்சி பட்டறை நடத்தப்படுவதுடன், சிறுகதை எழுதும் போட்டியும் ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் ஆர்வமுள்ள மணவர்கள் சிறந்த சிறுகதைப் படைப்பாளர்களாக உருமாற்றம் பெறுவர்.
கடந்த காலக் கல்வித் திட்டத்தில் யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறுகதை என்பது ஒரு பகுதியாகக் கையாளப்பட்டது. இப்போது தேர்வுக்கான கேள்வித் தாளில் சிறுகதை இல்லாதக் காரணத்தினால், பள்ளி அளவில் ஆர்வம் குன்றிப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டது. பள்ளியளவில் மாணவர்கள் மத்தியில் இந்த சிறுகதையை ஒரு போட்டியாக வைத்து அவர்களுக்கு வெற்றிப் பரிசுகள் வழங்கலாம் என பாண்டியன் ஆலோசனை வழங்கினார்.
ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கம்போங் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் இராஜமூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி என இந்த 4 தமிழ்ப்பள்ளிகளுக்கு தமிழ் மொழி என்னும் தலைப்பில் பாடம் கொடுக்கப்பட்டது.
அந்த ரீதியில், அப்பள்ளிகள் ஒன்றிணைந்து ஹோப்புள் தமிழ்ப்பள்ளியில் இந்த சிறுகதை பட்டறையை நடத்தியுள்ளனர். இதன் மூலம் சிறுகதைத் தளத்திற்கு புத்துயிர் பெற்றுள்ளதோடு மற்ற தமிழ்ப்பள்ளிகளின் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது என்று நம்பலாம் என்றார் பாண்டியன்.
இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துள்ள பள்ளி நிர்வாகத்திற்கும், அனைத்து ஆசிரியர்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும், பணியாளர்களுக்கும் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் சார்பில் அவர் நன்றியினைத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *