மலேசிய இந்து சங்கத்தின் பெயரைக் களங்கப்படுத்துவதா? ரமணனுக்கு கண்டனம்!
- Muthu Kumar
- 10 Oct, 2025
கோலாலம்பூர், அக்.10-
மலேசிய இந்து சங்கம் நாட்டில் இந்து மதத்தின் உயரிய மதிப்பை நிலைநிறுத்துவதற்கும், கோவில்கள் சட்டபூர்வமாகவும் சமய அடிப்படையிலும் செயல்படுவதற்கும் பல தசாப்தங்களாக சேவை செய்து வருகிறது. இதுபோன்ற ஒரு தேசிய அமைப்பை மரியாதையற்ற முறையில் விமர்சித்தும், இடைத்தரகர் என தவறாக குற்றம் சாட்டியும் டத்தோஸ்ரீ ரமணன் அளித்த கூற்றை மலேசிய இந்து சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது.
மலேசிய இந்து சங்கம் எந்த நிலையிலும் அரசாங்கத்திடம் ஆலயத்திற்கு வழங்கும் நிதியை மலேசிய இந்து சங்கத்திடம் வழங்கச் சொல்லவில்லை. இதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் ஓர் அமைச்சர் செயல்படுகிறார் என்றால் முதிர்ச்சி இல்லாதவர்களெல்லாம் அமைச்சரானால் இதுதான் சமுதாயத்தின் சாபக்கேடு என நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் ஸ்ரீகாசி சங்கபூஷண் தங்க கணேசன் தெரிவித்தார்.
மலேசிய இந்து சங்கம் கோவில்களுக்கு வழங்கப்படும் வெ.20 மில்லியன் நிதியை நிர்வகிக்க முன்வரவில்லை என்பதை அடியேன் மீண்டும் வலியுறுத்துகிறேன்.அந்த நிதி நேரடியாகக் கோவில்களின் வங்கிக் கணக்குகளுக்கு அரசாங்கத்தின் மூலம் அனுப்பப்படுகிறது. மலேசிய இந்து சங்கம் எந்த இடைத்தரகர் வேலையிலும் ஈடுபட்டதில்லை என்பதைத் தெளிவாகக் கூறுகின்றோம்.
இந்த நிதி ஒதுக்கீட்டுத் திட்டம், ஒற்றுமைத் துறை அமைச்சுடனும் மலேசிய இந்து சங்கத்துடனும் இணைந்து தொடங்கப்பட்ட முயற்சி ஆகும். இந்த முயற்சியின் மூலமாக கோவில்களுக்கு அரசு உதவி கிடைக்க வழிவகுத்தது மலேசிய இந்து சங்கம் மற்றும் ஒற்றுமைத் துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளே.
ஆனால் இப்போது டத்தோஸ்ரீ ரமணன் இதைத் தான் முன்னெடுத்த முயற்சியாகக் கூறுவது உண்மையை திசைதிருப்பும் செயலாகும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பொது இடங்களில் பேசும் போது உரிய மரியாதையும்,
பொறுப்பும் கையாளத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் எந்தவொரு கருத்தையும் வெளியிடுவதற்கு முன், அதன் உண்மைத்தன்மையைப் புரிந்து கொண்டு, சரியான தகவல்களை உறுதி செய்து கொள்ளுதல் அவசியம்.
மலேசிய இந்து சங்கம் எந்த மறைமுக நோக்கமும் கொண்டதில்லை; எங்கள் ஒரே நோக்கம் இந்து மதத்தின் வளர்ச்சிக்கும், கோவில்களின் நலனுக்கும் சேவை செய்வதே. அதேவேளை, மடானி அரசு உண்மையாகவே கோவில்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தால், ஒரு கோவிலுக்கு வெ.20,000 வழங்குவது போதாது,குறைந்தபட்சம் வெ100,000 ஒதுக்கப்பட வேண்டும். இதுவே கோவில்களின் பராமரிப்பு, மற்றும் சமூக சேவைகளை முன்னேற்றுவதற்குப் பொருத்தமானதாக இருக்கும்.
எந்த ஓர் அரசியல் நபரின் குறுக்கீடுகளும் அல்லது தவறான குற்றச்சாட்டுகளும் மலேசிய இந்து சங்கத்தின் நிலைப்பாட்டைத் தளரச் செய்யாது.எங்களின் அமைப்பு என்றும் சட்டத்தின் வரம்பிற்குள், சமய போதனைகளின் அடிப்படையில், சமூக நலனுக்காக செயல்பட்டு வரும் ஒரு தேசிய அமைப்பாகும் என்று ஓர் அறிக்கையில் தங்க கணேசன் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



