தேசிய வகை டப்ளின் தோட்ட தமிழ்ப்பள்ளி பிரிவு 7இன் தீபாவளி நல்லெண்ண விருந்து

top-news

செய்தி- தி. கிரிஷன் 

கூலிம், டிச.  3 -

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய வகை டப்ளின் தோட்ட தமிழ்ப்பள்ளி பிரிவு 7இன்  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும்  பள்ளி வாரியக்குழுவினரும்  ஒருங்கிணைந்து தீபாவளி நல்லெண்ண விருந்தொன்றனைக் கூலிம் சீனி சட்டிச் சோறு உணவக மண்டபத்தில் சிறப்புற ஏற்பாடு செய்திருந்தனர். இம்முறை நிகழ்ச்சியின் இயக்குநர்  மோகனராஜ்  அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று  வரும் இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். இவ்விழா இரு நோக்கங்களை முதன்மையாகக் கொண்டு நடத்தப்பட்டு வருவதாக தேசிய வகை டப்ளின் தோட்ட தமிழ்ப்பள்ளி பிரிவு 7இன் தலைவர் சுரேஷ் ராவ் ஜெகநாதன் கருத்துரைத்தார்.

இவ்விழா நிதி திரட்டுவதற்கும் திரட்டப்பட்ட நிதியானது மாணவர்களின் போக்குவரத்துச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அதன்படியாக மாணவர்களின் சீருடை இயக்க முகாம், பள்ளிச் சுற்றுலா, அறிவியல் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தேவையான ஆதரவு இந்த நிதி மூலம் வழங்கப்படுமென்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

இதற்கு முன்னர் சேகரிக்கப்பட்ட தொகையின் பயனாக பள்ளி மாணவர்களில் ஒருவர் பாடல் திறன் போட்டியின் இறுதிச்சுற்றை எட்டியிருப்பது, பள்ளி சமூகத்தின் ஒத்துழைப்பையும் நிதி முயற்சிகளின் பயனையும் வெளிப்படுத்தும் சிறந்த சான்றாக கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி 2026 புதிய மாணவர் சேர்க்கையினை வலுப்படுத்தும் நோக்கத்தையும் எடுத்துக்கொண்டது. தற்போது பத்து மாணவர்கள் கற்றுத் தரப்படும் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. 

மேலும், பள்ளியின் சுற்றுப்பகுதிகளில் ஏழு முதல் ஒன்பது வயதுடைய சில சிறுவர்கள் இன்னும் பள்ளிக்கூடத்திற்குப் பதியாமலிருப்பது கவலையை ஏற்படுத்தும் நிலையைக் கொண்டுள்ளது. அவர்களுக்காகச் சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, அவர்களைப் பள்ளியில் பதிவு செய்ய ஊக்கப்படுத்தும் விழிப்புணர்வை இந்நிகழ்ச்சி உருவாக்கியுள்ளது. தாமான் முத்தியாரா, சுங்கை கோப், கரங்கான், பத்து பூத்தே, உளுபைப் ஆகிய பகுதிகளைச் சார்ந்த மாணவர்களுக்கு இந்த போக்குவரத்து வசதி சிறப்பாக அமைத்துத் தரப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

போக்குவரத்துக்கு அப்பாற்பட்டு, மாணவர்களின் காலை சிற்றுண்டி, மதிய உணவு, பள்ளிச் சீருடை, கல்விப் பொருட்கள் ஆகிய அத்தியாவசியங்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவுடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளன இன்று பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு மணியம் நாகலிங்கம் தெரிவித்தார்.

 மாணவர்களின் கல்விப் பயணம் குறுக்கீடின்றி முன்னேற வேண்டும் என்பதே இவ்வமைப்பின் அடிப்படைத் திட்டம் என பள்ளி வாரியக்குழுத்தலைவர் திரு சுரேஷ் ராவ் ஜெகநாதன் வலியுறுத்தினார்.

இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளி வாரியக்குழு துணைத்தலைவர் திரு பன்னீர்செல்வம் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். “சிறு பள்ளி என்ற அளவுகோலில் இருந்தாலும், நடைபெறும் நிகழ்ச்சிகளின் அளவானது பெரிய  பள்ளிகளின் நிலையில் உள்ளன. இத்தகைய தமிழ்ப்பள்ளிகள் மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *