அம்னோவிலிருந்து விலகுகிறாரா அக்மால்?

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 7: ஒற்றுமை அரசில் அடுத்த பொதுத் தேர்தல் வரை தொடருவோம் என அம்னோ தலைவர் அகமட் ஸாஹித் ஹமிடி அறிவித்ததைத் தொடர்ந்து, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சாலே தனது பதவியில் இருந்து விலகும் சாத்தியத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் நிலைப்பாட்டை தன்னால் இயன்ற அளவில் முழுமையாக வெளிப்படுத்த முயன்றதாகவும், குறைபாடுகள் இருந்தால் அது தன்னிடமே இருக்கலாம் என்றும் அவர் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மதம், இனம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான 3R விவகாரங்களில் தொடர்ச்சியான “சிவப்பு கோடுகள்” மீறப்பட்டதாக, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் குறிப்பிட்ட அவர்,  ஒற்றுமை அரசுக்கு வழங்கப்பட்ட ஆதரவை அம்னோ வாபஸ் பெற வேண்டும் என்றும், எதிர்க்கட்சியில் இணைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அல்லாஹ்” என்ற சொல் இடம்பெற்ற காலுறைகள் விவகாரம், தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங் தலைகீழாக காட்டப்பட்ட சம்பவம் உள்ளிட்டவை மலாய்காரர்களைக் கோபமடையச் செய்ததாகவும், இஸ்லாம் மற்றும் தேசியக் கொடியை பாதுகாத்தவர்களே தண்டிக்கப்பட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், அரசின் நிகழ்ச்சியொன்றில் மதுபானம் வழங்கப்பட்டதும் மலாய்காரர்களின் அதிருப்தியை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

இதனிடையே, அம்னோ அரசியல் பணியகக் கூட்டத்தில், அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அக்மால் முன்வைத்ததாகவும், அவை கட்சித் தலைமையால் திறந்தவெளியில் விவாதிக்கப்பட்டதாகவும் ஸாஹித் ஹமிடி தெரிவித்தார்.

ஒற்றுமை அரசில் உள்ள தனது கூட்டணி பங்காளிகளை அம்னோ விட்டு விலகாது என்றும், பாஸ் கட்சியுடன் முஆஃபகாத் நேஷனல் என்ற பெயரில் முன்பு முன்வைக்கப்பட்ட ஆனால் நிறைவேறாத யோசனைகள் மீண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது என்றும் ஸாஹித் ஹமிடி கூறினார்.

இந்த நிலையில், பெயர் வெளியிட விரும்பாத அம்னோ  தலைவர் ஒருவர், சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டை நடத்துவதற்கு அக்மாலுக்கு அனுமதி அளிக்கும்போது இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஒன்றாவது, ஒற்றுமை அரசிலிருந்து விலகுவது குறித்து பேசக்கூடாது. இரண்டாவது, பிரதமர் அன்வர் இப்ராஹிமை விமர்சிக்கக் கூடாது என்பதே அந்த நிபந்தனைகள்.

ஆனால், அரசிலிருந்து விலகுதல், பாஸ் கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்தல் அல்லது அரசியல் நிலைப்பாட்டை மாற்றுதல் போன்ற விவகாரங்கள் ஸாஹித் ஹமிடியுடன் முன்பே விவாதிக்கப்படவில்லை என்றும் அந்த அம்னோ தலைவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அரசியல் ஆய்வாளர்களும் பாரிசான் நேஷனல் அல்லது அம்னோ ஒற்றுமை அரசிலிருந்து விலகும் சாத்தியம் மிகக் குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

எனவே, அக்மால் கனவு இப்போதைக்குப் பலிக்கும் சாத்தியமில்லை. இருப்பினும் தனது வெளிப்பாட்டை அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *