14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! சமூக ஊடகப் பிரபலம் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்
- Shan Siva
- 17 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 17: ஜூன் 17 அன்று, தமான் கங்கார், ஜாலான் தியோங்கில் உள்ள ஒரு வீட்டில், 14 வயது 10 மாதங்கள் ஆன சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், சமூக ஊடகப் பிரபலம் ஒருவர் இன்று பெர்லிஸில் உள்ள கங்கார் அமர்வு நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்து வாதிட்டார்.
நீதிபதி ஷரிஃபா நோராஸ்லிதா சையத் சலீம் இடிட் முன்னிலையில், 23 வயதான இமான் ஹஸ்ரிக் அஜிசானுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், அவர் தனது வாதத்தை முன்வைத்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(1)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படும்.
நீதிமன்றம், ஒரு நபர் ஜாமீனுடன் RM13,000 பிணைத்தொகையை அனுமதித்ததுடன், இமான் மாதந்தோறும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்ட சிறுமியையோ அல்லது அரசுத் தரப்பு சாட்சிகளையோ தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
இந்த வழக்கை ஆகஸ்ட் 14 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் முடிவு செய்தது. அரசுத் தரப்புக்காக துணை அரசு வழக்கறிஞர் நபிலா அஹ்மத் போட் ஆஜரானார், ஆனால் இமானுக்கு வழக்கறிஞர் யாரும் இல்லை!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



