அனைத்துலகப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD

தாய்லாந்து, பேங்காக்கில் அண்மையில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான உலக இளைஞர் ஸ்டெம் (STEM) புத்தாக்கப் போட்டியில் (World Youth STEM Invention and Innovation) கின்ராரா தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஈட்டிய மகத்தான வெற்றி, மலேசிய மாணவர்களிடையே காணப்படும் உயர்மட்ட ஒழுக்கத்தையும் அனைத்துலக அளவிலான போட்டித் தன்மையையும் பறைசாற்றுகிறது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இப்போட்டியில் இம்மாணவர்கள் 'தங்க விருது', 'நடுவர் தேர்வு விருது' ஆகியவற்றை வென்றதோடு, 'சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை' பிரிவில் உலகின் மிகச்சிறந்த முதல் ஐந்து கண்டுபிடிப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இம்மாணவர்களின் சாதனை ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறையில் அவர்களின் அசாத்திய திறமையை நிரூபிப்பதோடு மட்டுமல்லாமல், சவால்களை எதிர்கொள்ளும் அவர்களின் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். "நமது நாட்டின் இளம் தலைமுறையினர் உலக அரங்கில் மிகச்சிறந்த திறமையாளர்களுடன் போட்டியிடும் அசாத்திய ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பதற்கு இந்த வெற்றி ஒரு சான்றாகும். சர்வதேச மேடைகளில் பங்கேற்பதற்குத் தேவையான முறையான தயாரிப்பு, துணிச்சல் மற்றும் வலுவான தன்னம்பிக்கை ஆகியவற்றை இம்மாணவர்கள் மிகச்சிறப்பாகக் கொண்டுள்ளனர்," என்று அவர் கூறினார்.


நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ள ஆர்த்திஷா தீபன், ஆதீஷா மூர்த்தி, கேஷ்வினி இளத்தாச்சன், அர்வின் குமார் மற்றும் புராணி விவேகன் ஆகிய ஐந்து மாணவர்களையும் அவர் தனிப்பட்ட முறையில் பாராட்டியுள்ளார். மேலும், இம்மாணவர்களின் வெற்றிக் கதைகளையும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் நேரில் கேட்டறியும் பொருட்டு, அவர்களை விரைவில் நேரில் சந்திப்பதற்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஆதரவே இம்மாணவர்களின் வெற்றிக்கு உந்துசக்தியாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், கல்வி மற்றும் ஸ்டெம் துறையில் மலேசியா மடானி அரசாங்கம் மேற்கொண்டு வரும் முதலீடுகள், நாட்டின் வருங்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகத் திகழும் என்றார்.

அறிவு, திறன் மற்றும் படைப்பாற்றல் மிக்க தலைமுறையை உருவாக்கும் நாட்டின் இலக்கிற்கு ஏற்ப, இந்தச் சாதனை எதிர்காலத்தில் சமுதாயத்திற்குப் பயனளிக்கும் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *