அபிநயங்களால் ஓர் ஆச்சரியத் திருவிழா!

top-news
FREE WEBSITE AD


பரதக் கலையின் உன்னதம் உணர்த்தும் ஓர் ஆச்சரியத் திருவிழா அண்மையில் Persiaran Subang Mewah, USJ 1 என்ற முகவரியில் உள்ள, Auditorium SJK(C) Chee Wen அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

அப்சரஸ் நிருத்யா நாட்டியாலயாவின் ஆருத்ரா எனும் ஆடல் கலைப் படைப்பாக பல்வேறு அங்கங்களோடு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

கிள்ளான், புக்கிட் திங்கி ஸ்ரீ மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் வளர்ச்சிப் பணிக்கான நிதி திரட்டும் நோக்கில், அப்சரஸ் நிருத்யா நாட்டியாலயாவின் மூத்த மாணவர்களின் ஒத்துழைப்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்விற்கு ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்பு வருகை புரிந்து நிகழ்வைக் கண்டுகளித்தார். அவருடன் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விசாலமான அரங்கில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் நிகழ்ச்சிக்கு வலுசேர்த்தன.

நேர்த்தியான பயிற்சியோடு மேடையில் தோன்றிய நடனமணிகள், தங்கள் உடல் மொழியில், நவரசங்களையும் கொண்டு வந்து ஒவ்வொரு பாடலுக்கும் தக்கவாறு நடன அசைவுகளில் சபையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கடவுளரின் கதைகளை தங்கள் நடன அசைவுகளின் வழி நமக்கு உணர்த்தி, பிரமிக்கச் செய்தனர்.

தெய்வங்களுக்கும், குருமார்களுக்கும் வணக்கம் செலுத்தி தொடங்கிய நடனம்... மெல்ல மெல்ல தெய்வீக ராகங்களால், பலப் பல பரிமாணம் பெற்று இறுதியில் மங்கலப் பாடலோடு பக்திப் பரவசத்தில் மெய் சிலிர்க்க வைத்தது.

பெரும்பாலும் புராணக் கதைகள் மற்றும் மதக் கருப்பொருள்களை மையமாக வைத்தே பரதக் கலையை பல மேடைகளில் நாம் கண்டு ரசித்திருப்போம். ஆனால், இங்கே வித்தியாசமாக தான் கண்டு உணர்ந்து, உருகிய ஒரு காட்சியை, அதன் உணர்வுகளை அப்படியே தன் அபிநயங்களால் நம் கண்முன் நிகழ்த்தி நம்மையும் உருக வைத்து, நெகிழ வைத்து, கண் கலங்க வைத்து அந்த இறைவனின் திருப்பாதத்தில் நம்மையும்  சரணடைய வைத்துவிட்டார் அப்சரஸ் நிருத்யா நாட்டியாலயாவின் ஆசிரியை ஸ்ரீமதி மங்களேஸ்வரி கோபாலகிருஷ்ணன்.

தமிழகத்தின் புகழ்பெற்ற சந்நிதானத்தில் யாருக்கும் கிடைக்காத நடராஜரின் திருவுருவக் காட்சி, அவருக்கும் அவரது மாணவர் சிலருக்கும் கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது அரிதாக நடக்கும் விஷயம் என்பதால். அந்தக் காட்சியில் மெய்மறந்து, ஈசனைத் துதித்து உருகி அங்கு வேண்டியிருக்கிறார்கள் அவர்கள். அதையே மனதில் வைத்து, அதை இந்த மேடையில் நிகழ்த்திக் காட்டியது வந்திருந்தவர்களுக்கும் பாக்கியம்தான்.

உடல் முழுக்க அருள் நிறைந்து, உள்ளம் முழுக்க இறைவன் படர்ந்து, தன்னை மறந்து மேடையில் அவர் நிகழ்த்திய அந்த அபிநய ஆராதனை காணக் கிடைக்காத பேரதிசயம்தான்.

பரதக் கலை இத்தனை சக்தி வாய்ந்ததா? அபிநயங்களில் இப்படியும் ஆட்கொள்ள முடியுமா? நம்மால் அழ முடியுமா? நம்மால் உருக முடியுமா? முடியும்.. முடியும் என தன் அழகோவிய அபிநயங்களால் நம்மை வியப்பில் மூழ்கடித்துவிட்டார் ஆசிரியை ஸ்ரீமதி மங்களேஸ்வரி கோபாலகிருஷ்ணன்.

இந்தக் குழுவின் மிக முக்கிய சிறப்பம்சம், நிகழ்வின் அத்தனை அங்கங்களிலும், நிகழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் மிக நேர்த்தியாக கவனம் செலுத்தி தங்களை அவர்கள் நிரூபித்த விதம்தான்.

மற்ற பரத நிகழ்ச்சிகளைப் போல் இல்லாமல், தனித்துவமாய் தங்களின் அனைத்து விஷயத்திலும் நேர்த்தியைக் அமைத்துக்கொண்டு சாதனை செய்தார்கள்.

ஒப்பனை என்றால் இந்த அளவுக்குத்தான் இருக்க வேண்டும்... ஆடைகள் இப்படித்தான் இருக்க வேண்டும்... அணிகலன்கள் இந்த அளவுக்குப் போதும் என பார்த்துப் பார்த்து அதிகமாய் இவர்கள் மெனெக்கிட்டிருப்பது மேடையில் அழகாய் தெரிந்தது.

அதேபோல், பெரிய பெரிய பாடல் கீர்த்தனைகள்... நீண்ட நடனம்... அதிக எண்ணிக்கையில் குழு என மேடை முழுக்க பிரமாண்டம் காட்டியது இவர்கள் திறமைக்கு மற்றுமொரு சான்று.

சினிமா பாடல்களுக்கு அபிநயம் பிடிப்பதில்லை என்கிற இவர்களின் கொள்கையும் இந்த உன்னதக் கலை மீது இவர்கள் வைத்திருக்கும் பக்திக்குச் சான்று.

சின்னஞ்சிறு குழந்தைகள் முதல், இளம் பெண்கள் வரை அத்தனை பேரின் அபிநயங்களிலும் தெரிந்தது, இக்கலையின் மீதான அவர்களின் அக்கறை.

அழகழகான கீர்த்தனைகள், அற்புதமான காட்சிகள், கண்குளிரும் ஒளி அமைப்புகள், ஆர்வம் மிக்க ரசிகர்கள், அற்புதமான உணவு என நிகழ்வு முழுக்க அற்புதங்களால் நிறைந்திருந்தது.

பொதுவாக நிகழ்ச்சி நெறியாளர் என்றால் வெளியில் இருந்து யாராவது வந்து தொகுப்புகள் சொல்லிச் செல்வது வழக்கம்.

ஆனால், இங்கே அதிலும் புதுமை படைத்து அசத்தியிருந்தார்கள. அப்சரஸ் நிருத்யாலயா நடனக் குழுவினர்.

அந்த நடனக் குழுவின் மாணவியான கமாலினி கலைமணி  நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது வித்தியாசமாய் இருந்தது.

அதிலும் நடனத்தை உணர்ந்தவர், அதைப் பயின்றவர். எனவே அவரே நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தது அனைவரையும் கவர்ந்தது.

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தனித்துவமாய் ஒலித்தது அவரின் குரல்.

இனிமையான குரலில், இடையிடையே மூச்சிரைக்க ஆடிவிட்டு, ஓடி வந்து பேசும் மொழியில் புதுமைப்பெண்ணாய் அரங்கையே அதிர வைத்தார் அவர்.

கடந்த 25 ஆண்டுகளாக நம் மலேசியத் திருநாட்டில், திறன் மிக்க ஆடல் கலைஞர்களை உருவாக்கி சாதனை படைத்து வருகிறது அப்சரஸ் நிருத்யா நாட்டியாலயா.

நாட்டியக் கலையின் தாய் வீடாக விளங்கும் தமிழகத்தின் கலா சேத்ராவில், புகழ்பெற்ற குருவான பத்மஸ்ரீ கே.லெட்சுமணன் அவர்களிடம், முறைப்படி பரதக் கலையைக் கற்றுக்கொண்ட ஸ்ரீமதி மங்களேஸ்வரி கோபாலகிருஷ்ணன், இந்த அப்சரஸ் நிருத்யா நாட்டியாலயாவை உருவாக்கி, எண்ணற்ற மாணவர்களுக்கு பரதக் கலையைப் பயிற்றுவித்து வருகிறார்.

மலேசியாவில்  4 இடங்களில் தற்போது இவர்களுடைய பரதநாட்டிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இன்னும், மலேசியாவின் பல்வேறு இடங்களில், இங்கு பயின்று நன்கு தேர்ச்சி அடைந்த மாணவர்களைக் கொண்டு மேலும் பல வகுப்புகளைத் தொடங்க இருக்கின்றனர்.

இந்தியா, இலங்கை, ,ஆஸ்திரேலியா,சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் சென்று தங்கள் படைப்புகளால் கௌரவம் பெற்றுள்ளனர் அப்சரஸ் நிருத்ய நாட்டியாலயாவின் மாணவர்கள்.

முழுக்க முழுக்க கலாச்சாரம் மீறாமல், பாரம்பரியத்தின் புனிதத் தன்மையோடு, ஆன்மிக நெறியோடு ஆடல் கலையை பயிற்றுவிக்கிறார்கள் இங்கே.

சினிமா பாடல்களுக்கு அபிநயம் பிடிக்கவோ, பொழுது போக்கிற்காக மேடைகளில் தோன்றவோ இங்கே அனுமதி இல்லை.

தெய்வீகக் கலையின் புனிதம் கெடாமல் பரதம் பயிற்றுவிக்கப்படுகிறது இங்கே.

இவர்கள் கற்றுக் கொடுக்கும் பரதமானது மலேசியாவிலும் சரி,பிற நாடுகளிலும் சரி வெளி உலகத்திற்கு தெரியும் வகையில், சரியான இடங்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்டும் வருகின்றது.

அந்த வகையில், நாட்டியாஞ்சலி   எனும் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் படைத்து, தங்கள் அபிநயங்களால் ஆண்டவனை மகிழ்வித்து உருகும் இவர்களின் முயற்சி போற்றுதலுக்குரியது என்பதோடுபிரசித்தி பெற்ற தலங்களான தஞ்சை பெரிய கோவில், திருச்சி சிதம்பரர் ஆலயம், தில்லை நடராஜர் ஆலயம், எறும்பீஸ்வரர் ஆலயம், உத்திரகோசமங்கை ஆலயம் ஆகிய புகழ்பெற்ற தலங்களில் இறை முன் கலை நிகழ்த்தி இறைவனை ஆராதிக்கின்றனர்.

அது மட்டுமல்லாது, ஆருத்ரா என்ற பெயரில், ஆண்டுதோறும் மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் இன்றி நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களின் திறமைகளை வெளிக்கொணர இங்கே வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

இதுவரை 11 அரங்கேற்றங்களைக் கண்டிருக்கும் அப்சரஸ் நிருத்யா நாட்டியாலயாவின் முக்கிய நோக்கம், இந்த உன்னத கலையை அதே அசல் தன்மையுடன் நாளையத் தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான்.

இந்திய பாரம்பரியக் கலைகளில்  மிக முக்கியமான கலையான இந்த பரதக் கலையை புகழுக்காகவோ, வருமானத்திற்காகவோ பயன்படுத்தாமல், இறைவனுக்காக அர்ப்பணித்து சேவைகளின் வழி பயணிக்க வேண்டும் என்ற அழகிய லட்சியத்துடன் திகழும், ஆசிரியை ஸ்ரீமதி மங்களேஸ்வரி கோபாலகிருஷ்ணன் மற்றும் அவர்தம் மாணவச் செல்வங்களின் அபிநயங்களால் அழகாகட்டும் எல்லாம்.

ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களின் புதல்வி திருமதி பவித்ரா தியாகராஜனும் மாணவியாக இந்நிகழ்வில் பங்கேற்று பரதம் படைத்து மகிழ்வித்தார்.

பவித்ரா தியாகராஜனின்  பரத அரங்கேற்றம் அப்சரஸ் நிருத்யா நாட்டியாலயாவின் 12-வது அரங்கேற்றமாக விரைவில் நடைபெறவிருக்கிறது.

பரதக் கலையின் மீது தீரா ஆர்வம் மிக்க மாணவியாக பவித்ரா தியாகராஜன் திகழ்வதோடு, மலேசியாவில் மென்மேலும் இக்கலையை வளர்த்தெடுக்க தம்மோடு இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நம்மிடையே தெரிவித்தார் ஆசிரியை ஸ்ரீமதி மங்களேஸ்வரி கோபாலகிருஷ்ணன்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *